பி.ஏ.பி., 3ம் மண்டலம் இரண்டாம் சுற்று நிறைவு; 3ம் சுற்று நீர் திறப்புக்கு ஒரு வாரம் இடைவெளி
உடுமலை; பி.ஏ.பி., மூன்றாம் மண்டலம், இரண்டாம் சுற்று, நாளை காலை நிறைவு செய்யப்படுகிறது. ஒரு வாரம் இடைவெளி விட்டு, மூன்றாம் சுற்றுக்கு நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94 ஆயிரத்து, 362 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த ஜன.,29ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, வரும் ஜூன் 13 வரை, 135 நாட்களில், உரிய இடைவெளிவிட்டு, ஐந்து சுற்றுக்களில், 10 ஆயிரத்து, 300 கன அடி நீர் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.தண்ணீர் திறப்பை தொடர்ந்து, பாசன பகுதிகளில், மக்காச்சோளம், தானியங்கள் மற்றும் காய்கறி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, நீர் இழப்பு, மழை இல்லாதது ஆகிய காரணங்களினால், திருமூர்த்தி அணை நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதனால், முதல் சுற்று, பிப்., 24ல் நிறைவு செய்யப்பட்டது. இந்நிலையில், சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில், ஏற்பட்ட பழுது காரணமாக, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து நீர் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.இதனால், திருமூர்த்தி அணை நீர்மட்டம் உயராமல், இரண்டாம் சுற்றுக்கு நீர் திறப்பது இழுபறி, மார்ச் 13ல், இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்கப்பட்டது.தொடர்ந்து நீர் வழங்கப்பட்ட நிலையில், திருமூர்த்தி அணை நீர்மட்டம் குறைந்ததால், மீண்டும் அணையில் நீர் சேகரித்து, ஒரு வாரம் இடைவெளியில், மூன்றாம் சுற்றுக்கு நீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், 'மூன்றாம் மண்டலம் இரண்டாம் சுற்று, நாளை காலை, 7:00 மணிக்கு நிறைவு செய்யப்படுகிறது. தொடர்ந்து, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வாயிலாக நீர் கொண்டு, திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்க வேண்டியுள்ளது. இதனால், ஒரு வாரம் இடைவெளி விட்டு, வரும், 17ம் தேதி முதல், மூன்றாம் சுற்றுக்கு நீர் திறக்கப்படும்,' என்றனர்.