உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அணையில் ஓடிய படகுகள் பராமரிப்பின்றி... மண்ணோடு... மண்ணாகிறது!திருமூர்த்திமலையில் மேம்படாத சுற்றுலா

அணையில் ஓடிய படகுகள் பராமரிப்பின்றி... மண்ணோடு... மண்ணாகிறது!திருமூர்த்திமலையில் மேம்படாத சுற்றுலா

உடுமலை:பல ஆண்டுகளாக திருமூர்த்தி அணையில் முடங்கியுள்ள படகு சவாரியை மீண்டும் செயல்படுத்தி, மலைவாழ் கிராம பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணியரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. மலைமேல் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி, மலையடிவாரத்தில், அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, நீச்சல் குளம் என ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக உள்ள இப்பகுதிக்கு, ஆண்டு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.அவர்கள் திருமூர்த்தி அணையின் அழகை கண்டு ரசிக்கும் வகையில், தளி பேரூராட்சி சார்பில், 1990ல் படகு சவாரி துவக்கப்பட்டது.இந்நிலையில், திருமூர்த்திமலை பகுதியிலுள்ள, மலைவாழ் கிராம பெண்கள், வாழ்வாதார மேம்பாட்டுக்காக, படகுகள் பராமரிப்பை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, அப்பகுதி பெண்களை உள்ளடக்கிய சுய உதவிக்குழு துவக்கப்பட்டு, கடந்த, 2002ல் அக்குழுவினரிடம் படகுகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்படைக்கப்பட்டது.இக்குழுவினர், 15 பேர் பயணிக்கும் இரண்டு மோட்டார் படகுகளை இயக்கியதுடன், 3 பெடலிங் படகுகளையும் பராமரித்து வந்தனர்.படகு சவாரி வாயிலாக பெறப்பட்ட வருவாயில், தளி பேரூராட்சிக்கு, 25 சதவீதமும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 75 சதவீதமும் என, பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது.எழில் மிகுந்த திருமூர்த்தி அணையின் அழகை, படகுகளில் சென்று ரசிக்க சுற்றுலா பயணியர் அதிக ஆர்வம் காட்டினர். இருப்பினும், அணையின் நீர் மட்டம் குறைந்துள்ள சீசனில், படகுகளை இயக்க முடியாமல், வருவாய் இழப்பு ஏற்பட்டது.பராமரிப்புக்காக அதிக தொகையை செலவிட முடியாமல், 2012ல், படகு சவாரி நிறுத்தப்பட்டு, சிறிய இடைவெளிக்கு, பிறகு, மீண்டும் பேரூராட்சி நிர்வாக உதவியுடன் சவாரி துவங்கியது.அதன்பின்னர், பல்வேறு காரணங்களால், படகு சவாரி முற்றிலுமாக முடங்கி, படகுகள் மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட அனைத்தும் காட்சிப்பொருளாக மாறின. அணையின் கரையில், ஒதுக்கி வைக்கப்பட்ட படகுகளை மீண்டும் இயக்க முடியாத நிலை உள்ளது.கடந்த கோடை சீசனில், திருமூர்த்திமலைக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருந்தது. நாள் முழுவதும், அப்பகுதியில் பொழுதுபோக்க சுற்றுலா பயணியர் ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால், படகு சவாரி இல்லாதது அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது.இதர சுற்றுலா சார்ந்த கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத நிலையில், படகு சவாரியும் இல்லாதது, சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையை குறைய செய்யும் நிலை உள்ளது.திருப்பூர் மாவட்ட சுற்றுலா துறை சார்பில், திருமூர்த்தி அணையில் படகு சவாரி துவக்கப்படும் என பல முறை அறிவிப்பு வெளியிடப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தளி பேரூராட்சியில் புதிதாக பதவியேற்றவர்களும், படகு சவாரி துவக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.பல ஆண்டுகளாக இழுபறியாக இருக்கும் இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய படகுகளை வாங்கி, இயக்கினால், வருவாய் இழந்து தவிக்கும், மலைவாழ் கிராம பெண்களுக்கு, வாழ்வாதாரம் கிடைக்கும்; சுற்றுலா பயணியரும் பயன்பெறுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை