மேலும் செய்திகள்
முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை
21-Jul-2025
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறுவர், சிறுமியர் துாரியாடி மகிழ்ந்தனர். ஆடிப்பெருக்கு திருநாளான நேற்று, கோவில்களில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. புதுமண தம்பதியர், புத்தாடை அணிந்து சென்று கோவில் மற்றும் நீர்நிலைகளில் வழிபட்டனர். ஆடிப்பெருக்கு என்றாலே, வடை பாயசத்துடன் வீட்டில் விருந்து தயாரித்து, உறவினர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்வதும் பழக்கமாக உள்ளது. திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் நேற்று ஆடிப்பெருக்கு அமர்க்களமாக கொண்டாடப்பட்டது. வீடு மற்றும் தோட்டங்களில், கயிற்றில் துாரி கட்டி, சிறுவர், சிறுமியர் உற்சாகமாக விளையாடினர். பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு, நடுத்தர வயதினரும், துாரியாடி மகிழ்ந்தனர். மாநகராட்சி பூங்காக்களில், நேற்று வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது; சிறுவர், சிறுமியர் ஊஞ்சல் ஆடினர். திருப்பூர், காங்கயம் ரோடு, சங்கிலிப்பள்ளம்பாலம் அருகே உள்ள ஏரிக்கருப்பாயன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள், கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து, ஊர்வலமாக சென்று, கருப்பராயசுவாமிக்கு அபிேஷகம் செய்தனர். அலங்கார பூஜையை தொடர்ந்து, 'கிடா' வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவிலில், ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. குருவாயூரப்ப சுவாமி, நீலவண்ண பட்டு பீதாம்பரம், துளசிமாலை, நவரத்தின அங்கி அலங்காரத்துடன், பச்சை வண்ண முகத்துடன் அருள்பாலித்தார். பெரும்பாலான வீடுகளில், தங்களது முன்னோர் நினைவாக, அவர்களது படங்களை அலங்கரித்து வைத்து, பிடித்த பதார்த்தங்களை படைத்து, குடும்பத்தினர் வழிபட்டனர்.
21-Jul-2025