மேலும் செய்திகள்
508 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்த 8,265 பெண்கள்
05-Jul-2025
பிறக்கும் குழந்தைக்கு, தாய்ப்பால் தான் அமிர்தம். அதுதான் ஒரே உணவும் கூட. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, அக்குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு தாய்ப்பால் தான் பிரதானம். தாய்ப்பால் பற்றாக்குறையால், எண்ணற்ற குழந்தைகள் பாதிக்கின்றன; குறிப்பாக, குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது, மிக அவசியம்; அத்தியாவசியம். இதை உணர்ந்த அவிநாசியை சேர்ந்த ரூபா செல்வநாயகி என்பவர், கடந்த, 2017 துவங்கி, தாய்ப்பாலை தானமாக வழங்க துவங்கியுடன், தானம் வழங்க முன்வந்த தாய்மார்களை ஒருங்கிணைத்தார்; மேலும், திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் தானம் வழங்க துவங்கினார்; பின், 'அமிர்தம்' பவுண்டேஷன் என்ற அமைப்பை நிறுவினார். முறையாக பதிவு செய்து, தமிழகம் மட்டுமின்றி புதுவை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் கிளை பரப்ப, அதில், தாய்ப்பால் தானம் வழங்க முன்வரும் தாய்மார்கள் ஒருங்கிணைந்தனர். அவரவர் ஊரில், அவர்களது ஏற்பாட்டில் தாய்ப்பால் தானம் வழங்கும் பணியை செவ்வனே செய்து வருகின்றனர். சாதனை புத்தகத்தில்...தாய்ப்பால் தானம் வழங்குவதில், 'இந்தியா புக் ஆப் ரெக்கார்டு' மற்றும் 'ஆசியா புக் ஆப் ரெக்கார்டில்', இளம் தாய்மார்கள் இடம் பிடித்து ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர் என்பது தான், 'ைஹலைட்.'கோவையைச் சேர்ந்த சிந்து மோனிகா என்பவர், 42 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கி, இந்தியா மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றிருந்தார். பின், கோவையைச் சேர்ந்த, ஸ்ரீவித்யா, 103 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கியும், இதையடுத்து செங்கல்பட்டைச் சேர்ந்த, தாமரைச் செல்வி என்பவர், 157 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கியும் சாதனை புத்தகத்தில் பதிவாயினர். தற்போது, திருச்சியை சேர்ந்த செல்வபிருந்தா என்பவர், 22 மாதம் தாய்ப்பால் தானமாக வழங்கி, 300 லிட்டர் தானம் வழங்கி, இந்தியா மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார். - ஆக., 1 - 7 தாய்ப்பால் வாரம். ---- தாய்ப்பால் தானம் வழங்கி, சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்ற செல்வபிருந்தா. ரூபா செல்வநாயகி பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் 10, 171 லிட்டர் தாய்ப்பால் தானம் எங்கள் அமைப்பின் வாயிலாக, 400 முதல், 500 பாலுாட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் வழங்கி வருகின்றனர். கடந்த, 2017ல் துவங்கி தற்போது வரை, 10 ஆயிரத்து 171 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கியுள்ளோம். துவக்க காலத்தில், 3 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே, தாய்ப்பால் வங்கி இருந்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும், 45 தாய்ப்பால் வங்கிகள் உள்ளன. இதன் வாயிலாக தாய்ப்பால் சேமித்து வைக்கப்பட்டு, வழங்கப்படுகிறது. நன்கொடையாளர்கள் உதவியுடன் எங்கள் சேவையைத் தொடர்கிறோம். ஆரோக்கியமான குழந்தைகளாக அவர்கள் வளர்ந்து வருவதை பார்க்கும் போது, எங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, தாய்ப்பால் தானம் வழங்குவது; பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். - ரூபா செல்வநாயகி, நிர்வாக அறங்காவலர், அமிர்தம் பவுண்டேஷன்
05-Jul-2025