ஆரோக்கியமான தலைமுறைக்கு தாய்ப்பால் அவசியம்
பல்லடம்: பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்கம் சார்பில், உலகத் தாய்ப்பால் வார விழா, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் கதிரேசன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய மருத்துவர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர் ராஜ்குமார் பேசியதாவது: தனது குழந்தைக்கு பால் புகட்ட வேண்டும் என்ற மனம் தாய்மார்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். மூன்று நாட்கள் தாய் சாப்பிடவில்லை என்றாலும் கூட பால் சுரக்கும். அதுதான் இறைவனுடைய அதிசய படைப்பு. கர்ப்பிணிகள் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதால், நல்ல ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க, குழந்தைகளுக்கு, தாய்ப்பால் மிக அவசியம். குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் வரை, நாள் ஒன்றுக்கு, 8 முதல் 10 முறை பால் கொடுக்கலாம். பொது இடங்களில் தாய்மார்கள் எங்கு சென்றாலும், அங்கு, தாய்ப்பால் கொடுக்க இடம் ஒதுக்கித் தருமாறு கேட்பதற்கு தாய்மார்களுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, ரோட்டரி சார்பில், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. நுாற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் பங்கேற்றனர்.