பட்டா மாறுதலுக்கு லஞ்சம்; வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டு சிறை
திருப்பூர்: தாராபுரம் கோவிந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வராஜ், 60. இவர் தந்தை பெயரில் இருந்த விவசாய நிலத்துக்கு, விவசாயத்துக்கான இலவச மின் இணைப்பு பெற, 1990ம் ஆண்டு விண்ணப்பித்தார்.கடந்த 2009ம் ஆண்டு, மின் இணைப்பு பெற கட்டணம் செலுத்த மின் வாரியம் கடிதம் அனுப்பியது. மின் இணைப்பு பெறும் நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய மின் வாரியத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து, பட்டா பெயர் மாறுதல் செய்ய, கோவிந்தாபுரம் வி.ஏ.ஓ., திருமலைசாமி, 54, என்பவரை அணுகினார். அவர், பட்டா மாறுதல் செய்ய 5,000 ரூபாய் லஞ்சமாக கேட்டார். 2009 ஜன., 6ம் தேதி, லஞ்ச பணத்தை பெறும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் திருமலைசாமியை கைது செய்தனர்.இதுகுறித்த வழக்கு திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.நீதிபதி செல்லதுரை நேற்று அளித்த தீர்ப்பில், திருமலைசாமிக்கு, 3 ஆண்டு சிறை தண்டனையும், 4,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.