உள் விளையாட்டு அரங்கம் அமையுங்க! வீரர்கள் அரசுக்கு வலியுறுத்தல்
உடுமலை; உடுமலை, சுற்றுப்பகுதியில், 35 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை, 27 தனியார் பள்ளிகள் உள்ளன. தவிர, அரசு கலைக்கல்லுாரி மற்றும் இரண்டு தனியார் கல்லுாரிகளும் உள்ளன. உடுமலையில், தேசிய அளவில் சாதனை படைத்த ஹாக்கி வீரர்கள் பலர் உள்ளனர். தேசிய அளவிலும் ஹாக்கி விளையாட்டிற்கு, சிறந்த பெயர் பெற்ற பெருமையும், உடுமலை ஹாக்கி வீரர்களுக்கு உள்ளது. அத்தகைய நிலை தற்போது முற்றிலுமாக மாறியுள்ளது.ஹாக்கி பயிற்சி பெறுவதற்கான அடிப்படை வசதிகள் இல்லாதது தான், இந்நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. அனைத்து பள்ளிகளும் போட்டி போட்டு விளையாடப்பட்ட ஹாக்கி இப்போது, விரல் விட்டு எண்ணினாலும், ஓரிரண்டு பள்ளிகளில் மட்டுமே பயிற்சி நடக்கிறது. அரசு பள்ளிகளில், ஹாக்கி விளையாட்டில் சிறந்து விளங்கும் பயிற்சியாளர்கள் இருப்பினும், விளையாடுவதற்கான உபகரணங்களும், இடவசதியும் இல்லை. பயிற்சி செய்ய இடமில்லாமல், திறமை இருந்தும் அதை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்காமல், மாவட்டப் போட்டிகளில் பங்கேற்பதோடு முடங்கி விடுகின்றனர். உடுமலையில், தேசிய அளவில் வெற்றி பெற்ற சிறந்த ஹாக்கி வீரர்கள் இருந்த நிலையிலும், தற்போது இவ்விளையாட்டிற்கான பங்களிப்பு குறைந்துள்ளது. விளையாட்டு அரங்கம் இல்லை என்பதே முக்கிய காரணம். உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தை, ஹாக்கி உள் விளையாட்டு அரங்கமாக மாற்ற தொடர் கோரிக்கை விடப்படுகிறது. இருப்பினும், சம்பந்தப்பட்ட துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது விளையாட்டு ஆர்வலர்களிடையே வேதனையே ஏற்படுத்துகிறது. உடுமலையில், ஹாக்கி பயிற்சியாளர்கள் மற்றும் திறன் பெற்ற மாணவர்கள் அதிகம் இருக்கின்றனர். நேதாஜி மைதானத்தை உள் விளையாட்டு அரங்கமாக மாற்றினால், திறமையுள்ள வீரர்களை தேசிய அளவில் கொண்டுசெல்வதற்கான அடித்தளமாக அமையும் என, முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.