தீயாய் எரியும் பிரச்னை; குப்பை கொட்ட எதிர்ப்பு: மறியல் செய்த 170 பேர் கைது
திருப்பூர்; திருப்பூர் அருகே ஊத்துக்குளி, வெள்ளியம்பாளையத்தில் மாநகராட்சி குப்பையை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 20 பெண்கள் உட்பட, 170 பேரை குண்டுகட்டாக போலீசார் துாக்கி சென்று கைது செய்தனர். திருப்பூர் மாநகராட்சி சேகரமாகும் குப்பையை கொட்டுவதற்கு பாறைக்குழியை தேடி அதிகாரிகள் அலைந்து வருகின்றனர். தேங்கி கிடக்கும் குப்பையை கொட்ட செல்லும் இடம் எல்லாம் மக்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்பு வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடுகின்றனர். குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த, இரு வாரமாக நகரின் பல இடங்களில் மலை போல் குப்பை தேங்கியுள்ளது. அவ்வகையில், இதுநாள் வரை, 20 ஆயிரம் டன் குப்பை அப்புறப்படுத்த முடியாமல் தேங்கி கிடப்பதாக அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மக்கள் போராட்டம் இந்நிலையில், மாநகராட்சி குப்பையை ஊத்துக்குளி தாலுகா, வெள்ளியம்பாளையம் ஊராட்சியிலுள்ள பயன்பாடற்ற பாறைக்குழியில் கொட்ட, லாரிகள் சென்றது. இதனையறிந்த மக்கள் லாரிகளை சிறை பிடித்து விஜயமங்கலம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊத்துக்குளி போலீசார், ஆர்.டி.ஓ., மோகன சுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதில், உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக் கட்டாக வாகனங்களில் ஏற்றினர். இருதரப்புக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நடந்தது. போலீசார் நடவடிக்கை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மொத்தம், 170 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுவித்தனர். கடந்த, இரு வாரமாக நகரின் பல இடங்களில் மலை போல் குப்பை தேங்கியுள்ளது. அவ்வகையில், இதுநாள் வரை, 20 ஆயிரம் டன் குப்பை அப்புறப்படுத்த முடியாமல் தேங்கி கிடப்பதாக அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர் துாண்டும் மாநகராட்சி மா.கம்யூ., குற்றச்சாட்டு
இப்பிரச்னை குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் கூறியதாவது: குப்பையை அறிவியல் பூர்வமாக அழிக்கும் திடக்கழிவு மேலாண்மையை நடத்த உருப்படியான திட்டம் ஏதும் இல்லாத திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், தேவையற்ற திட்டங்களுக்கு பணத்தை விரயம் செய்கிறது. அனைத்து பொதுமக்களை நன்மைக்காக ஒரு விரிவான திடக்கழிவு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் உருவாக்குவதற்கு தயாராக இல்லை. பல நாடுகளில் வெற்றிகரமான திடக்கழிவு திட்டங்கள் பல பெரு நகரங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் இருந்து கற்றுக்கொண்டு இங்கே முற்போக்கான புதிய திடக்கழிவை திட்டங்களை திருப்பூர் மாநகராட்சியும் தமிழக அரசும் உருவாக்க தயார் இல்லை. மாவட்ட பகுதிகளில் சென்று கைவிடப்பட்ட பாறைகளில் கொட்டி அந்த பகுதி சுற்றுச்சூழலை கெடுக்கும் நடவடிக்கைக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே, பொங்குபாளையம், நெருப்பெரிச்சல், பூமலூர், சுக்கம்பாளையம், கீரனுார் போன்ற பகுதிகளில் குப்பைகளை கொண்டு சென்று பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக திரும்ப வந்த மாநகராட்சி நிர்வாகம், தற்பாது மொரட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம் அருகில் இருக்கும் பாறைகளில் குப்பை கொட்ட வந்துள்ளனர். இங்கு கொட்டினால், அருகில் உள்ள கிராமங்களில் விவசாயி கிணறுகளும், குடிநீர் ஆதாரங்களும் நீர் மாடுபட்டு கடுமையான பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகவே, மாநகராட்சி நிர்வாகம் இங்கே குப்பை கொட்டுவதை கைவிட வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கு சென்று, அந்த பகுதி மக்களை பதற்றத்திற்கு உள்ளாக்குவதும், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த வேண்டிய நிர்பந்தத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதும், ஒரு அரசு நிர்வாகம் செய்ய வேண்டிய செயல் அல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.