கால்நடை பராமரிப்பு பயிற்சி; இளைஞர்களுக்கு அழைப்பு
உடுமலை; திருப்பூர் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தமிழக திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில், கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டு சான்றிதழ் பயிற்சி, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் நடந்து வருகிறது. இதில், கறவை மாட்டின் இனப்பெருக்கம், பால் உற்பத்தி மற்றும் பராமரிப்பு முறைகள், பால் உற்பத்தி திறனை அதிகரிக்க விஞ்ஞான முறைகளை கற்றுக் கொடுத்தல், குறைந்த செலவில் லாபகரமாக மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி மற்றும் பன்றி வளர்ப்பு குறித்து பயிற்சியும், கால்நடை தீவனங்களான, அசோலா மற்றும் ஊறுகாய்ப்புல் உற்பத்தி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மாதம் ஒரு குழு என, 5 மாதங்களுக்கு தொடர்ந்து பயிற்சி முகாம் நடக்கிறது. விருப்பமுள்ள இளைஞர்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகளை அணுகியும், www.tnskill.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்யலாம், என, கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.