கோர்ட் உத்தரவை மீறலாமா; கமிஷனரிடம் மக்கள் கேள்வி
பல்லடம்:பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, பச்சாபாளையம் பகுதியில், நகராட்சி எரியூட்டு மயானம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு விடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை, பராமரிப்பதற்கான பணிகளை 'ஆத்மா அறக்கட்டளை' என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடுவதற்கு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து பொதுமக்கள் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த ஐகோர்ட், பணிகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது. இருப்பினும், தொடர்ந்து பணிகள் நடந்து வந்ததால், நேற்று, நகராட்சி அலுவலகம் வந்த பொதுமக்கள், கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர். அவர்கள் கூறுகையில், 'பச்சாபாளையத்தில் மயானம் அமைக்க வேண்டாம் என துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ரோட்டரி, அரிமா சங்கம் என, எத்தனையோ அமைப்புகள் இருக்க, எதற்காக ஆத்மா அறக்கட்டளைக்கு அனுமதி கொடுத்தீர்கள்? நாங்கள் நகராட்சிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் சார்ந்த குடும்பத்தினர் யாரும், ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், நகராட்சி தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆத்மா அறக்கட்டளைக்கு எவ்வாறு அனுமதி அளித்தீர்கள்? மேலும், கோர்ட் உத்தரவை மீறி, பணிகளை மேற்கொள்ளலாமா? இதற்கெல்லாம் கோர்ட்டில் நீங்கள் விளக்கம் அளித்தாக வேண்டும்' என்றனர். நகராட்சி கமிஷனர் அருள் கூறுகையில், 'கோர்ட் உத்தரவின்படி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்து எந்த அறக்கட்டளைக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறதோ அவர்கள் மூலம் பணிகள் தொடரும்' என்றார்.