புற்றுநோய் சிகிச்சை மையம் விரைவில் செயல்பாடு
திருப்பூர்; ''திருப்பூர், புற்றுநோய் அதிநவீன சிகிச்சை மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்'' என்று அமைச்சர் சாமிநாதன் கூறினார்.திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புற்று நோய் சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் 'நமக்கு நாமே' திட்டத்தில், ரோட்டரி சங்கம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் இம்மையம் அமைக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில், புற்றுநோய் சிகிச்சை மைய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி தலைமை வகித்தனர். கலெக்டர் கிறிஸ்துராஜ், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர். 12.5 லட்சம் வழங்கிய அமைச்சர்
புற்று நோய் மையத்துக்கு, தனது சொந்த நிதியிலிருந்து, 12.50 லட்சம் ரூபாய் வழங்கி அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் அதி நவீன சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இம்மையத்தில், கதிர்வீச்சு புற்றுநோயியல் பிரிவு, ஐ.ஜி.ஆர்.டி., - எச்.டி.ஆர்., உள் கதிர்வீச்சு மருத்துவம், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் பிரிவு, அணு மருத்துவம், முழு உடல் பெட் சி.டி., ஸ்கேன், இதய மருத்துவ கேத் லேப் உள்ளிட்ட நவீன வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, புற்றுநோய் சிகிச்சை மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, திருப்பூர் ரோட்டரி பொது நல அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன், துணை தலைவர் கார்த்திகேயன், செயலாளர் இளங்குமரன், பொருளாளர் அருள்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.