கார் - ஆட்டோ டிரைவர்கள் மோதல்; தாலுகா ஆபீசில் பேச்சுவார்த்தை
அவிநாசி; அவிநாசி தாலுகா அலுவலகத்தில், வாடகை கார் - ஆட்டோ மற்றும் தனியார் டாக்ஸி நிறுவன டிரைவர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில், சுமூக தீர்வு ஏற்படுத்தப்பட்டது. அவிநாசியில் அங்கீகாரம் பெற்ற வாடகை ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவிநாசி - திருப்பூர் சாலையில், பைபாஸ் சந்திப்பு பகுதியில், ஆம்னி பஸ்கள், பயணிகளை ஏற்றிச்செல்கின்றன. இங்கு ஆட்டோ ஸ்டாண்ட் செயல்படுகிறது. சில நாட்கள் முன், புக்கிங் செய்யாத பயணியை ஏற்றி செல்வதாக கூறி ஆட்டோ டிரைவர்கள், தனியார் நிறுவன டாக்ஸி டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவிநாசி வாடகை ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள், அவிநாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், தனியார் நிறுவன டாக்ஸி டிரைவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்; தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்திருந்தனர். நேற்று அவிநாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சந்திரசேகர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் ராஜபிரபு, முத்துமாரியம்மாள், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்.ஐ., லோகநாதன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் குமரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 'அவிநாசி - திருப்பூர் ரோட்டில் பைபாஸ் சந்திப்பு அருகே தனியார் நிறுவன டாக்ஸி டிரைவர்கள் புக்கிங் சவாரியை இறக்கி விட்டவுடன், ஒரு கி.மீ., தள்ளி கார்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்; புக்கிங் செய்யாத சவாரியை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை. அதே போல வாடகை ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் பயணிகளிடம் முறையாக அனுமதி பெற்று வாடகை ஏற்றி செல்ல வேண்டும்; சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உரிய முறையில் போலீசில் புகார் அளிக்கவும்,' அறிவுறுத்தப்பட்டது.