சிமென்ட் ஷீட் மேற்கூரை குழந்தைகள் தவிப்பு
பல்லடம்; கோடை துவங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச்சூழலில், பல்லடம் வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளி கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் சில, சிமென்ட் ஷீட்கள் வேயப்பட்ட கட்டடங்களில் தான் இயங்கி வருகின்றன.இதனால், குழந்தைகள் மட்டுமின்றி, பணியாற்றும் ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மதிய நேரங்களில், கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், சிமென்ட் ஷீட் மேற்கூரைகள் கொண்ட கட்டடங்கள், அனலை கக்குகின்றன. சாதாரணமாகவே, வெயில் காலங்களில், குழந்தைகளுக்கு சரும ரீதியான நோய் தாக்குதல்கள் உண்டாகும்.இவ்வாறு, சிமென்ட் ஷீட் வேயப்பட்ட கட்டடங்களால், குழந்தைகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவர். இத்துடன், பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில், மின் விசிறி இல்லை. அவ்வாறு இருந்தாலும், செயல்படாமலும் உள்ளன. இதனால், குழந்தைகள் உட்பட ஊழியர்களும் பாதிக்கப்படுவதால், சிமென்ட் ஷீட்கள் வேயப்பட்ட அங்கன்வாடி மற்றும் பள்ளிகளின் மேற்கூரைகளை மாற்றி அமைக்க வேண்டும். உரிய ஆய்வு மேற்கொண்டு, இதுபோன்ற கட்டடங்களை சீரமைக்க வேண்டியது அவசியம்.