மேலும் செய்திகள்
சிலம்ப விளையாட்டு போட்டிகள்
03-Oct-2025
திருப்பூர்: மாற்றுத்திறனாளி ஜோடிக்கு திருப்பூரை சேர்ந்த 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளையினர் திருமணம் செய்துவைத்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, 32. மாற்றுத்திறனாளியான இவர், தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, பழக்கடை ஒன்றில் வேலை பார்க்கிறார். திருப்பூர் அருகே, இடுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வைஷ்ணவி, 27; மாற்றுத்திறனாளி. பாலாஜிக்கும், வைஷ்ணவிக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டினரும் சம்மதித்த நிலையில், போதிய வசதியின்றி, திருமணத்தை நடத்த வழியில்லாமல் சிரமப்பட்டு வந்தனர். தகவல் அறிந்த, திருப்பூர் 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளையினர், இருவருக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகளை மேற்கொண்டனர். கடந்த, செப்., 20ம் தேதி, பல்லடம், அறிவொளி நகர் மாரியம்மன் கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்றுமுன்தினம் தாராபுரத்தில் இந்த ஜோடிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகி லீலாவதி கூறுகையில், 'பெற்றோர் முன்னிலையில், இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. தாலிக்கு தங்கம், பட்டு சேலை, வேட்டி உட்பட கல்யாண ஏற்பாடுகள் அறக்கட்டளை மூலம் செய்யப்பட்டது. இல்வாழ்க்கையில் இணைந்த மணமக்கள் மட்டுமன்றி, அவர்களது பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்' என்றார்.
03-Oct-2025