அரசு பள்ளிகளில் துாய்மை பணிகள் பாதிப்பு; பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை
உடுமலை; உடுமலையில் கிராமப்புற பள்ளிகளில் சுகாதாரம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு, துாய்மைப்பணியாளர்கள் இல்லாததுதான் முக்கிய காரணமாக இருந்தது.அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் வாயிலாக, தற்காலிகமாக கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களால் இப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு துவக்கப்பள்ளியில் ஊதியமாக, 1,000 ரூபாய், நடுநிலைப்பள்ளியில் நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு, 1,500 ரூபாய், உயர்நிலைப்பள்ளி பணியாளர்களுக்கு, 2,000 ரூபாய், மேல்நிலைப்பள்ளிக்கு, 2,500 ரூபாய் என அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.ஒவ்வொரு முறையும், இப்பணியாளர்களுக்கு பல மாதங்களுக்கு ஒரு முறைதான் ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் பள்ளிகளில் சுகாதாரப்பணிகளும் அரைகுறையாக மேற்கொள்ளப்படுகிறது. ஒரு சில பள்ளிகளில் மட்டுமே, ஆசிரியர்கள் சொந்த செலவில் கூடுதலாக பணியாளர்களை நியமித்தும், ஏற்கனவே உள்ளவர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கியும் பள்ளியின் சுகாதாரத்தை பராமரிக்கின்றனர்.ஆனால் அனைத்து பள்ளிகளிலும் அவ்வாறு நடப்பதில்லை. பள்ளியின் கழிப்பறைகள், வளாகத்தை சுகாதாரமாக பராமரிப்பதற்கு, கல்வித்துறை அவ்வப்போது ஆய்வு மேற்கொள்கிறது. ஆனால் பிரச்னைக்கான தீர்வுக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.இம்முறையும் இப்பணியாளர்களுக்கு பிப்., மாதம் முதல் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், அப்பணியாளர்கள் பள்ளிக்கு வர மறுக்கின்றனர்.பள்ளியின் சுகாதாரத்தை தொடர்ந்து மேம்படுத்த, அவர்களுக்கான ஊதியத்தை தாமதமில்லாமல் வழங்க வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.