சிறந்த வீரர், வீராங்கனைகளை கண்டறிய ஜூடோ, பேட்மின்டனுக்கு பயிற்சியாளர்
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்க, ஜூடோ, பேட்மின்டனுக்கு பிரத்யேக மாவட்ட பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருப்பூர் மாவட்டத்துக்கென தடகள பயிற்சியாளர் உள்ளார். தடகளத்தில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு காலை, மாலை இவர்கள் பயிற்சி வழங்குகின்றனர். மாநில, தேசிய போட்டிகளுக்கு தயார்படுத்துகின்றனர்.மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் பேட்மின்டனுக்கான மைதானம் உள்ளது. காலை, 5:00 முதல் 8:00 மணி வரையும், மாலை, 4:00 முதல் இரவு 7:00 மணி வரையும், 125க்கும் அதிகமானோர் பேட்மின்டன் விளையாடுகின்றனர். வாரம் ஒருமுறை ஜூடோ பயிற்சி வழங்கப்பட்டு, போட்டிகளும் நடக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரும் பதிவு செய்து ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.தடகள வீரர்களுக்கு தனி பயிற்சி அளிப்பது போன்று, ஆர்வமுள்ள பேட்மின்டன், ஜூடோ வீரர்களுக்கும் பயிற்சி தர, சிறப்பான வீரர்களை உருவாக்க, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் கூறுகையில்,' தடகளத்தில் ஆர்வமுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு தடகள பயிற்சியாளர் உள்ளார். ஜூடோ, பேட்மின்டனு க்கு பிரத்யேக பயிற்சியாளர் நியமிக்க மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. பயிற்சியாளர் நியமித்து போட்டிகளில் ஆர்வமுள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு தீவிர பயிற்சி வழங்கி, சிறந்த வீரர், வீராங்கனைகளாக உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும்,' என்றார்.