40 ஆண்டு ஆல மரத்தை அகற்றாமல் மாநகராட்சி அலுவலகம் கட்டும் பணி
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டவுள்ள இடத்தில் அகற்றப்படவுள்ள மரங்கள் குறித்து வனத்துறையினர் கணக்கெடுப்பு மேற்கொண்டனர். திருப்பூர் மாநகராட்சிக்கு புதிய அலுவலகம், தாராபுரம் ரோடு பகுதியில் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு செயல்பட்ட இடத்தில் கட்டப்படுகிறது. மொத்தம், 46 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அலுவலக வளாகம் கட்டும் பணிக்கு, சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதற்கு முன் அங்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த கட்டடங்கள் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து, வளாகத்தில் உள்ள மரங்கள் அகற்றும் பணிகள் துவங்கின. மொத்தமுள்ள, 20 மரங்களில், ஒரு ஆலமரம் 40 ஆண்டு வயதுடைய மரம் மையமாக வளர்ந்து நிற்கிறது. இந்த மரத்தை அகற்றாமல் கட்டடம் கட்டும் வகையில், டிசைனிங் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இந்த வளாகத்தில் உள்ள மற்ற மரங்கள் வெட்டி அகற்றப்படவுள்ளது. இதற்காக, மாவட்ட அளவிலான பசுமை கமிட்டிக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. அதனடிப்படையில் அகற்ற வேண்டிய மரங்கள் குறித்து வனத்துறையினர், மரங்களை பார்வையிட்டு அளவீடு செய்து 'மார்க்கிங்' செய்தனர். வனத்துறை அறிக்கை அடிப்படையில் பசுமை கமிட்டி, மரங்கள் அகற்றும் விதம் மற்றும் அதனை கையாளும் நடவடிக்கை குறித்து உத்தரவிடும். அதன்பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெட்டப்படும் மரங்களை ஏலம் விடுதல், அகற்றப்படும் மரங்களுக்கு ஈடாக பராமரிக்க வேண்டிய மரங்கள் ஆகியன இதில் தெரிவிக்கப்படும்.