கூட்டாற்றை கடக்க தொடர் போராட்டம்; தளிஞ்சி மக்கள் வேதனை
உடுமலை; மழைக்காலங்களில் கூட்டாற்றை கடக்க பாலம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், தளிஞ்சி மலை கிராம மக்கள் வேதனையில் உள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனசரகத்துக்குட்பட்டது தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பு. இக்குடியிருப்பில், 150க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இரு மலைகளுக்கு இடையிலுள்ள, சமவெளியில், வீடுகள் கட்டி, விவசாய சாகுபடியிலும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.விளைநிலங்களில், விளையும் பீன்ஸ் மற்றும் இதர விளைபொருட்களை சமவெளிக்கு கொண்டு வர மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். சின்னாறுக்கு வர, கரடுமுரடான, பாறைகள் நிறைந்த, 6 கி.மீ., அடர்ந்த வனப்பகுதியிலுள்ள மண் பாதையில் பயணிக்க வேண்டும்.வழித்தடத்தில், கூட்டாறு குறுக்கிடுகிறது. ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை. மழைக்காலங்களில், ஆற்றை கடக்க முடியாத நிலை காணப்படுகிறது.இதனால், விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், பிற தேவைகளுக்காகவும், சமவெளிக்கு வர தளிஞ்சி கிராம மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். பரிசல் அமைத்து தற்காலிகமாக ஆபத்தான முறையில், கூட்டாற்றை கடக்கின்றனர்.மருத்துவ தேவைக்குக்கூட கேரளா சம்பக்காடு சென்று, அங்கிருந்து பஸ் மற்றும் இதர வாகனங்களில் பயணித்து உடுமலைக்கு வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் தொலைதுாரம் பயணிக்க வேண்டியிருப்பதால், குழந்தைகளும், முதியவர்களும் பாதிக்கின்றனர்.பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியிருப்பதால், கூட்டாற்றில் பாலம் கட்டித்தர வேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அரசுக்கும் தொடர்ந்து மனு அனுப்பினர்.வனத்துறை மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சார்பில், பல முறை ஆய்வு நடத்தியும் பாலம் கட்டப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர். தற்போது கூட்டாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு இருப்பதால், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.