உடுமலை: நடப்பு சீசனில் மகசூல் பாதித்து சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால், காலிபிளவர் விலை உயர்ந்து வருகிறது. உடுமலை வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு, விளைநிலங்களில், சொட்டு நீர் பாசனம் அமைத்து, பல்வேறு காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், மலைப்பிரதேசங்களில் மட்டும் விளைந்த காலிபிளவரை, சில ஆண்டுகளாக உடுமலை வட்டாரத்திலும், விவசாயிகள் சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர். மலையாண்டிகவுண்டனுார், குட்டியகவுண்டனுார், எலையமுத்துார் சுற்றுப்பகுதிகளில், காலிபிளவர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இச்சாகுபடியில், நாற்று நடவு செய்து, 60 நாட்களில் பூக்கள் பூக்கத்துவங்கி, 80வது நாளில் இருந்து அறுவடை செய்யலாம். நாற்று, நடவு செலவு, உரம், களை எடுத்தல், பூச்சிக்கொல்லி மருந்து என, ஏக்கருக்கு சுமார், 40 ஆயிரம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது. நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த அதிக செலவிட வேண்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகளில், செடிகளை, இலை சுருட்டை நோய் தாக்கியது. இந்த நோய்த்தாக்குதலால், நடப்பு சீசனில், மகசூல் குறைந்துள்ளது. இதனால், உடுமலை சந்தைக்கு வரத்து குறைந்து விட்டது. நேற்று காலிபிளவர் ஒரு பூ 35 ரூபாய் வரை விற்பனையானது. இங்கு கொள்முதல் செய்யப்படும் காலிபிளவர் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். கேரள வியாபாரிகள், உடுமலை பகுதியில் காலிபிளவரை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், உள்ளூர் தேவை அடிப்படையிலேயே விலை நிர்ணயிக்கப்படுகிறது. விவசாயிகள் கூறுகையில், 'காலிபிளவர் சாகுபடியில், சீதோஷ்ண நிலை மாற்றம், நோய்த்தாக்குதலால், மகசூல் பாதித்துள்ளது. சந்தையில், விலை இருந்தும் மகசூல் இல்லாததால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது,' என்றனர்.