இ-நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம் ஒரு கிலோ ரூ.146க்கு விற்பனை
உடுமலை, ; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் நேற்று நடந்த ஏலத்தில், ஒரு கிலோ ரூ.146.10 க்கு விற்பனையானது.உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, கோட்டமங்கலம், பொன்னேரி, விளாமரத்துப்பட்டி, சின்ன வீரம்பட்டி, ஆண்டியகவுண்டனுார், புக்குளம், பணத்தம்பட்டி, உள்ளிட்டபல்வேறு பகுதிகளிலிருந்து, 33 விவசாயிகள், 80 மூட்டை அளவுள்ள, 4 ஆயிரம் கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இ-நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 7 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.முதல் தரம், ரூ. 136.99 முதல், ரூ. 146.10 வரையும், இரண்டாம் தரம், ரூ. 100 முதல், 131.69 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.இங்கு, கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.இ-நாம் திட்டத்தின் இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.