உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோர்ட் வழிகாட்டுதல்களை பின்பற்ற மாநகராட்சி திட்டவட்டம்! குப்பை விவகாரத்தில் ஒத்துழைக்க வேண்டுகோள்

கோர்ட் வழிகாட்டுதல்களை பின்பற்ற மாநகராட்சி திட்டவட்டம்! குப்பை விவகாரத்தில் ஒத்துழைக்க வேண்டுகோள்

திருப்பூர்: ''குப்பை அகற்றும் விவகாரத்தில் கோர்ட் வழிகாட்டுதலின் படி அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படும்'' என, மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள், முதலிபாளையம் பாறைக்குழியில் கொண்டு சென்று கொட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பாறைக்குழியில் குப்பை கொட்ட தடை விதித்த ஐகோர்ட் மேலும் சில நடைமுறைகளைப் பின்பற்றவும், மாசுக் கட்டுபாட்டு வாரியத்தின் அறிவுரைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தியது.

அதிகாரிகள் குழு ஆய்வு

கடந்த வாரம் இது குறித்து கோர்ட் வழிகாட்டு நடைமுறைகளின்படி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற நேற்று மாலை மாநகராட்சி மன்ற சிறப்பு கூட்டம் நடந்தது. துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் அமித் முன்னிலை வகித்தனர்.

ஆரோக்கியமான தீர்வு

மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் பாறைக்குழியில் கொண்டு கொட்டும் நடவடிக்கை நீண்ட காலமாக உள்ளது. திருப்பூர் மாநகராட்சி மீது தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2023 ம் ஆண்டில் பிறப்பித்த விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற புதிய வழிகாட்டுதலை கோர்ட் வழங்கியுள்ளது. நீண்ட காலமாக நிலவிய பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, ஆரோக்கியமானதாக இது அமைந்துள்ளது.

இடுவாய் பகுதியில்...

இடுவாய் பகுதியில் உள்ள 10 ஏக்கர் மாநகராட்சி நிலத்தில் கோர்ட் வழிகாட்டிய, மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த வகையில் தற்காலிகமாக குப்பைகள் கொண்டு சென்று சேர்க்கப்படும். மேலும் நீண்ட கால குத்தகை அடிப்படையிலோ, சொந்தமாகவோ நிலம் வாங்கி குப்பைகள் தரம் பிரித்து, பயன்பாடுக்கு அனுப்பும் வகையிலான திட்டத்துக்கான நடவடிக்கையும் நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும். இடுவாய் பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என, பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகிறோம். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதி மக்களை அழைத்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, கோர்ட் வழிகாட்டுதல் குறித்தும், அங்கு மேற்கொள்ளப்படும் பணி விவரங்களும் விளக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். நுண் உர உற்பத்தி மையம் மேம்படுத்துதல்; பயோ காஸ் உற்பத்தி மையம் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும். மூன்று மாத காலத்துக்குள் இவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வரப்படும். நகரப் பகுதியில் எங்கும் குப்பைகள் தேங்காத வகையில், செகண்டரி பாய்ன்ட் முழுமையாக இல்லாத வகையில், பணியாற்ற வேண்டும். சுகாதார பிரிவு அலுவலர்கள் இதை முறையாக, கவுன்சிலர்களின் ஒத்துழைப்போடு செய்ய வேண்டும். குப்பைகள் முறையாக அகற்றப்படுவது, பாதுகாப்பான முறையில் கொண்டு சேர்ப்பது ஆகிய நடவடிக்கைகள் முழுமையாக, நுணுக்கமாக கண்காணிக்கப்படும் - தினேஷ்குமார், மேயர், திருப்பூர் மாநகராட்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை