| ADDED : நவ 24, 2025 06:23 AM
திருப்பூர்: திருப்பூரில் சேகரமாகும் குப்பை கழிவுகள் அகற்றுவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. பெரும்பாலும், பாறைக்குழிகளில் கொண்டு சென்று குப்பை கொட்டும் நடைமுறை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. பாறைக்குழிகளில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பல பகுதிகளிலும் கிராம மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக பாறைக்குழியில் குப்பை கொண்டு ெசன்று கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி வார்டுகளில் ஆங்காங்கே குப்பை கழிவுகள் கொண்டு சென்று கொட்டி வைக்கப்பட்டு வருகிறது. குப்பை பிரச்னைக்கு தீர்வு காண, இதை மக்கள் இயக்கமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மையில் நடைமுறையில் உள்ள விதிமுறைகளை அமல்படுத்தும் வகையிலும், மேலும் சில நிலையான வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளது. அவற்றை செயல்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம், மொத்த கழிவு உற்பத்தியாளர்கள் என்ற வகைப்பாட்டில் வரும் நிறுவனங்கள், விடுதிகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளர், பிரதிநிதிகளுடன் மாநகராட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அடுத்த கட்டமாக நாளை காலை 10:30 மணிக்கு, டவுன்ஹால் மாநாட்டு அரங்கில், இறைச்சி கடைக்காரர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் அமித் ஆகியோர் பங்கேற்கின்றனர். பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் பெரும்பாலும், இறைச்சி கழிவுகளால் ஏற்படும் பிரச்னைகளை முன்வைத்துள்ளனர். இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நிர்வாகம் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுத்து, அறிவுரைகள் வழங்கியும், இறைச்சி கழிவு களை முறையாக அகற்றாமல், குப்பை தொட்டிகள், ரோட்டோரங்கள், நீர் வழிப்பாதைகள் என கொண்டு சென்று கொட்டுவது வழக்கமாக உள்ளது. ஆலோசனைக்கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மையில் இறைச்சி கடைகளின் பங்களிப்பு குறித்து கருத்துகள் பெற்று, ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது.