உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நகராட்சி பணிகளில் அதிகாரிகள் அலட்சியம்: கவுன்சிலர்கள் புகார்

 நகராட்சி பணிகளில் அதிகாரிகள் அலட்சியம்: கவுன்சிலர்கள் புகார்

உடுமலை: உடுமலை நகராட்சியில் வளர்ச்சிப்பணிகள், துாய்மைப்பணி, தெரு விளக்கு பராமரிப்பு என பணிகளில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக, கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். உடுமலை நகராட்சிக்கூட்டம் தலைவர் மத்தீன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், கவுன்சிலர்கள் பேசியதாவது: உடுமலை நகராட்சி சார்பில், சாலையோர வியாபாரிகள் பதிவு செய்து, தள்ளுவண்டி, கடன் உதவி என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், முறைகேடாகவும், தாறுமாறாகவும் ரோடுகளில் நிறுத்தப்படுவதோடு, சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். ராஜேந்திரா ரோடு பகுதியிலுள்ள தள்ளுவண்டியில், சட்ட விரோதமாக சில்லிங் மது விற்பனையும் நடக்கிறது. அதே போல், அனுமதி பெறாமல், வெங்கடகிருஷ்ணா ரோடு, கல்பனா ரோடு, சந்தை ரோடு பகுதிகளில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்துள்ளன. உழவர் சந்தை பகுதியில், இரு புறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. தெரு விளக்குகள் பராமரிப்பதில் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். 'தினமலர்' நாளிதழில் வந்த செய்தியையாவது அதிகாரிகள் பார்த்தனரா, அனைத்து ரோடுகளிலும் தெரு விளக்குகள் எரியாமல், இருட்டாகவே உள்ளது. இதற்கு எதற்கு தெரு விளக்குகள் அமைப்பது, அதனை பராமரிக்க தனியாருக்கு ஒப்பந்தம், கண்காணிக்க அதிகாரிகள் இருக்க வேண்டும். புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மக்கள் ஆபத்தான ரோட்டை கடந்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும். அண்ணா குடியிருப்பு பகுதியில், பாலம் தோண்டி இரு மாதமாக இழுபறியாகி வருகிறது. இதே போல், நகராட்சியில் எநத பணிகளும் குறிப்பிட்ட காலத்தில் துவங்கி, முடிக்கப்படுவதில்லை. மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கொசு ஒழிப்பு பணிக்கு, 40 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு மாதத்திற்கு, ரூ.53 லட்சம் செலவு செய்யப்படுகிறது. ஒருவர் கூட நகரப்பகுதியில் பணி மேற்கொள்வதை பார்க்க முடிவதில்லை; கொசுவும் ஒழிந்த பாடில்லை. சுகாதாரப்பிரிவில் மக்களுக்கு சேவை செய்வதில் அலட்சியமாக உள்ளனர். துாய்மைப்பணிகள் முழுமையாக மேற்கொள்வதில்லை. நகராட்சித்தலைவர் பதில் அளிக்கையில், 'புதிய பஸ் ஸ்டாண்டிற்கு, மக்கள் நடந்து செல்ல கீழ் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரோட்டோர ஆக்கிரமிப்புகள் குறித்து போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், முறையாக மக்களுக்கு பணியாற்ற அறிவுறுத்தப்படும்,' என்றார். துாய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி உடுமலை நகராட்சியில் பணியாற்றும், 242 துாய்மை பணியாளர்களுக்கு, அரசு உத்தரவு அடிப்படையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, ஆண்டுக்கு, 1.45 கோடி ரூபாயை பொது நிதியிலிருந்து செலவிட அனுமதி கோரி, கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, நகராட்சி முன்னாள் தலைவர் வேலுசாமி கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை