உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலம் அமைக்க 12 அடி ஆழ குழி: மொபட் விழுந்ததில் தம்பதி பலி

பாலம் அமைக்க 12 அடி ஆழ குழி: மொபட் விழுந்ததில் தம்பதி பலி

திருப்பூர்; தாராபுரம் அருகே, தரைப்பாலத்துக்காக தோண்டப்பட்ட 12 அடி ஆழக்குழியில் மொபட் விழுந்ததில், தம்பதி பலியாயினர்; மகள் படுகாயமடைந்தார்.திருப்பூர் மாவட்டம், குண்டடத்தை சேர்ந்தவர் நாகராஜ், 44; தொழிலாளி; மனைவி ஆனந்தி, 38. மகள் தீக் ஷிதா, 13 ஆகியோருடன், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வழிபட சென்றார். வழிபாடு முடிந்து, நேற்று நள்ளிரவு தாராபுரம் திரும்பினர். பின், ஸ்டாண்டில் இருந்த டூவீலரை எடுத்துக்கொண்டு மொபட்டில் குண்டடம் புறப்பட்டனர்.குள்ளாய்பாளையம் அருகே ரோடு விரிவாக்கம் செய்வதற்காக தரைப்பாலம் கட்டுமானப்பணி நடந்துவந்தது. அங்குள்ள 12 அடி ஆழக் குழியில் எதிர்பாராதமாக இவர்கள் வந்த மொபட் விழுந்தது. நேற்று காலை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், குழிக்குள் ரத்த வெள்ளத்தில் இவர்கள் கிடப்பதைப் பார்த்து, குண்டடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். வந்துபார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் தம்பதியர் இறந்து கிடந்தனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தீக் ஷிதா மீட்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.கலெக்டர் கிறிஸ்துராஜ், எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி சாலைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி அதிகாரிகளை கடிந்துகொண்டனர்.''இறந்த தம்பதிக்கு தலா, 3 லட்சம் ரூபாய், படுகாயமடைந்த சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் என, ஏழு லட்சம் ரூபாய் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கான முழு மருத்துவச்செலவையும் அரசே ஏற்கிறது'' என்று கலெக்டர் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் நிவாரணம்

புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த சேர்வக்காரம்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ், 44. இவர் தனது மனைவி ஆனந்தி, 38 மற்றும் மகள் தீக் ஷிதா, ஆகியோருடன், 3ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தாராபுரம் - காங்கேயம் சாலை, குள்ளாய்பாளையத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்திலிருந்து, இரு சக்கர வாகனம் தவறி விழுந்த விபத்தில், நாகராஜ் மற்றும் அவரது மனைவி ஆனந்தி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த துயரகரமான செய்தியைக் கேட்டு, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் பலத்த காயமடைந்து, கோவை, தனியார் மருத்துவமனையில் மகள் தீக் ஷிதா,சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா மூன்று லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீக் ஷிதாவிற்கு, ஒரு லட்சம் ரூபாயும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

அதிகாரிகள் அலட்சியம்: உயிர்ப்பலிக்கு காரணம்

''விபத்து நடந்த இடத்தில், ரோட்டில் 12 அடிக்கு குழி தோண்டப்பட்டு, மழை காலங்களில் நீர் வெளியேறும் வகையில் தரைப்பாலத்துடன் கட்டப்பட்டு வருகிறது. ரோடு பணி நடக்கிறது என்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் முன்னதாக அறிவிப்பு பலகை இல்லை. தோண்டப்பட்ட குழியை சுற்றியும் பெயரளவுக்கு தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. முறையான தடுப்பு வைத்து அடைக்கப்படாததே, உயிர்ப்பலிக்கு காரணமாக அமைந்தது. பெற்றோர் மரணமடைந்துவிட, ரத்த வெள்ளத்தில் சிறுமி ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக உயிருக்குப் போராடியுள்ளார்.'' என்றனர் பொதுமக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ranga Srinivas
மே 05, 2025 18:04

திரசவிட மாடல் அரசு, நங்கள் தன் நம்பர் ஒன்னு என்று பீத்தும் அரசும் மற்றும் அந்த அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும்...அப்பாவி உயிர்களை கொன்றவர்களை கொலை கேசு போட்டு உள்ளே தள்ள வேண்டும்.


Ganesun Iyer
மே 05, 2025 17:44

நிவாரணம் நாங்க கவர்ன்மென்டு குடுத்துடுவோம், கமி..ச... ஒரு பைசா குறையக்கூடாது ...ஆமா


VENKATASUBRAMANIAN
மே 05, 2025 08:26

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சும்மா கடிந்து கொண்டால் போதாது. இரண்டு உயிர்கள் பிரச்சினை. மேலும கான்ட்ராக்டர் இவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை