வெற்றி நிச்சயம் திட்டத்தில் மாடு வளர்க்க பயிற்சி
திருப்பூர்: தமிழகத்தில் அனைத்து துறை சார்ந்த தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் 'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது. மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும், அதில் வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், கால்நடை வளர்ப்போருக்கு மட்டுமின்றி, கால்நடை வளர்ப்புக்கு உதவியாக இருந்து, அதையும் ஒரு தொழிலாக செய்வது குறித்த பயிற்சி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் 'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் வழங்கப்படுகிறது. கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், ஒரு மாத காலம் வரை, 'மாடு வளர்ப்பு உதவியாளர்' பயிற்சி வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல், 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. 6,000 ரூபாய் ஊக்கத் தொகையுடன், சான்றிதழும் வழங்கப்படுகிறது. திட்டத்தின் ஒரு கட்டமாக, திருப்பூர், கால்நடை பல்கலை ஆராய்ச்சி மையத்தில், அடுத்த மாதம் இப்பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுவாக, கால்நடை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு தான், இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்படும் நிலையில், கால்நடை வளர்ப்பில் உதவியாளராக இருக்க விரும்புபவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.