பாறைக்குழியில் ஆபத்தான தேடல்
பல்லடம்; பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட்ட வேலம்பாளையம், கோடங்கிபாளையம், பூமலுார், காளிவேலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான கல்குவாரிகள், கிரஷர் நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு காரணங்களால், பல கல்குவாரிகள் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. பாறைக்குழிகளாக உள்ள இவற்றில், மழைநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் இவற்றில், குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.பாறைக்குழிகளின் ஆழம் தெரியாது என்பதால், இவற்றை பயன்படுத்துவது ஆபத்தானது. இச்சூழலில், பல்லடம் அருகே, கோடங்கிபாளையம் கிராமத்தில் உள்ள பயன்பாடற்ற பாறைக்குழிக்குள் இறங்கி சிலர் ஆபத்தான முறையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து கேட்டதற்கு, 'பாறைக்குழிக்குள் கொட்டப்பட்டுள்ளது காஸ்டிங் கழிவுகள் என்றும், இவற்றில் கிடைக்கும் இரும்புகளை சேகரித்து விற்றால் வருவாய் கிடைக்கும்,' என்றனர். செங்குத்தாக உள்ள பாறைக்குழியின் சரிவான பகுதியில் நின்றபடி, தேடுவது உயிருக்கே ஆபத்தாய் முடியும்.