உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபத்திருவிழா கூட்டு வழிபாடு

தீபத்திருவிழா கூட்டு வழிபாடு

திருப்பூர்: திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடுவது போல், வீடுகளிலும் அண்ணாமலையாருக்கு படையலிட்டு, தீபத்திருவிழா கொண்டாடும் பழக்கம் கிராமங்களில் இன்றும் இருக்கிறது. திருவண்ணாமலையில் இருந்து வாங்கி வரும் சுவாமி சிலைகளை, சிறிய பேழையில் வைக்கின்றனர்.கார்த்திகை மாத தீபத்திருவிழா அன்று எடுத்து சுத்தம் செய்து வழிபடுவது வழக்கம். இதன்மூலமாக, அண்ணாமலையாரை, தங்கள் இல்லங்களில் எழுந்தருள செய்து வழிபாடு நடத்துவதாக மக்கள் இன்றும் கருதுகின்றனர்.அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிக்கவுண்டன்பாளையத்தில், ஊர் மக்களின் அண்ணாமலையார் சுவாமிகள் உள்ள பேழை, விநாயகர் கோவிலில் வைத்து பராமரிக்கப்படுகிறது.தீபத்திருவிழாவில், அந்தந்த குடும்பத்தினர், அவர்களது சுவாமிகளை எடுத்து, படையலிட்டு வழிபடும் பழக்கம் நுாறாண்டுக்கும் மேலாக மாறாமல் நடந்து வருகிறது. தீபத்திருவிழாவான நேற்று முன்தினம், விநாயகர் கோவிலில் உள்ள பீரோவில் இருக்கும், சுவாமி பெட்டிகள் எடுக்கப்பட்டன.அந்தந்த குடும்பத்தினர் எடுத்து, சுவாமிகளை தீர்த்தத்தில் சுத்தம் செய்து வெள்ளை துணியை விரித்து அலங்கரித்து வைத்தனர்.பரணி தீபம் ஏற்றி வைத்து, தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, மாவிளக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து, பக்தியுடன் வழிபட்டனர்.அவரவர் வீடுகளில் கொண்டாட வேண்டியதை, விநாயகர், மாரியம்மன் கோவிலில் வைத்து பொதுவழிபாடாக நடத்தி வருவதாக, ஊர்பொதுமக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !