ரோடு போடும் பணியில் தாமதம் மக்கள் செல்ல முடியாமல் தவிப்பு
உடுமலை,; அந்தியூர் ஊராட்சியில் ரோடு போடும் பணிகளில் தாமதம் ஏற்படுவதால், பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது.உடுமலை ஒன்றியம் அந்தியூர் ஊராட்சியில், இந்திரா நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இங்கு புதிதாக ரோடு போடுவதற்கு, ஏற்கனவே இருந்த சிதிலமடைந்த ரோடு முழுவதும் தோண்டப்பட்டு மண் குவிக்கப்பட்டுள்ளது.ரோடு போடுவதற்கு ஜல்லிக்கற்கள், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களும் தயார் நிலையில் அருகே குவிக்கப்பட்டுள்ளன. ரோடு தோண்டப்பட்டு, 15 நாட்களுக்கு மேலாகியும் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.ரேஷன் கடை, கால்நடை மருத்துவமனை செல்வதற்கு இந்த ரோடுதான் பிரதானமாக உள்ளது. தற்போது தோண்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவ்வழியாக செல்வதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர்.இரவு நேரங்களில் அவ்வழியாக சென்று அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறையில் புகார் மனு அளித்துள்ளனர். உடனடியாக ரோடு போடும் பணிகளை துவக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.