டில்லி குண்டு வெடிப்பு எதிரொலி; திருப்பூரில் சோதனை தீவிரம்
திருப்பூர்: டில்லியில் கார் வெடிப்பு எதிரொலியாக, மாவட்டம் முழுதும் போலீசார் பலத்த வாகன சோதனை மேற்கொண்டனர். நம் நாட்டின் தலைநகர் டில்லியில், செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் அருகே கார் குண்டு வெடிப்பு நேற்று மாலை நடந்தது. இதில், இதுவரை, 10 பேர் இறந்தனர். பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் வெடிப்பு எதிரொலியாக, முக்கிய நகரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகர், புறநகர் என, மாவட்டம் முழுதும் அனைத்து போலீஸ் செக்போஸ்ட்களிலும், போலீசார் வாகன தணிக்கை தீவிரப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, முக்கிய சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் கூடுதலான இடங்களில் போலீசார் குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனர். லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் விசிட் சென்று, தங்கியுள்ளவர்கள் விபரம், சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது உள்ளனரா, அப்படியிருந்தால் தகவல் அளிக்கவும் அறிவுரை கூறி வந்துள்ளனர். இதுதவிர, வழிபாட்டு தலங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். வழக்கமான ரோந்து பணிகளை காட்டிலும், கூடுதல் ரோந்துகளை தற்போது போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.