உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தரமில்லாமல் கட்டப்பட்ட தடுப்பணைகள்; நேரடி ஆய்வு நடத்த கோரிக்கை

தரமில்லாமல் கட்டப்பட்ட தடுப்பணைகள்; நேரடி ஆய்வு நடத்த கோரிக்கை

உடுமலை; உடுமலை அருகே, உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளின் தரம் குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.குடிமங்கலம் ஒன்றிய, ஊராட்சிகள் வழியாக செல்லும், உப்பாறு மழை நீர் ஓடையின் குறுக்கே, 25 இடங்களில், தடுப்பணை கட்ட, 6 கோடியே 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கடந்த, 2022ல், ஒதுக்கப்பட்ட நிதியில், தரமில்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், பெரும்பாலான தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கவில்லை; ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டுள்ளது என புகார் எழுந்துள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:உப்பாறு ஓடையில், விருகல்பட்டி ஊராட்சி, பழையூர் முதல் பெரியபட்டி வரை, பல இடங்களில், தடுப்பணைகள் கட்டப்பட்டன. பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், தடுப்பணை கரை உடைவதுடன்; தடுப்பு சுவர் போதிய உயரம் இல்லாமல், மழை நீர் தேங்கவில்லை. பருவமழைக்கு பிறகும் பல தடுப்பணைகள் தண்ணீர் இல்லாமல், பரிதாப நிலையில் காட்சியளிக்கிறது.நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ள ஒன்றியத்தில், நீர் மட்டத்தை உயர்த்த தடுப்பணைகள் தேவை என, தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினோம். அதன் அடிப்படையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் இதர திட்டங்களின் கீழ், அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால், திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்ட தடுப்பணைகளால், அரசு ஒதுக்கீடு செய்த நிதி முழுவதும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.பயன்பாட்டில் இருந்த தடுப்பணைகளும் துார்வாரப்படவில்லை. நீர் வழித்தடங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளது. தடுப்பணைகளின் தற்போதைய நிலை குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நேரடி ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !