சொத்து வரி உயர்வை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
திருப்பூர்; சொத்துவரி உயர்வை திரும்ப பெற்று, குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும்; ஒரு வரிக்கு ஒரு பாதாள சாக்கடை இணைப்பு என்ற முடிவை திரும்ப பெற வேண்டுமென, மா.கம்யூ., கட்சி வலியுறுத்தியுள்ளது.திருப்பூர் மாநகராட்சியில், உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்பப்பெற வேண்டும் என்பது உட்பட கோரிக்கையை வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் ஜெயபால், வடக்கு மாநகர செயலாளர் சவுந்திரராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், வேலம்பாளையம் நகர செயலாளர் நந்தகோபால் உள்ளிட்டோர் பேசினர். ஒவ்வொரு ஆண்டும், 6 சதவீத வரி உயர்வு செய்தால், மென்மேலும் வரி சுமை அதிகரிக்கும். எனவே, வரி உயர்வை திரும்ப பெற வேண்டுமென, மேயரிடம் வலியுறுத்தப்பட்டது.l திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் முன், மா.கம்யூ.,யினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜ், ஈஸ்வரன், ராஜேந்திர குபேரபூபதி முன்னிலை வகித்தனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் உன்னிகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம், வார்டு கவுன்சிலர்கள் சுப்பிரமணியம், 14 வார்டு கவுன்சிலர் தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அருணாசலம் நன்றி கூறினார்.