வார்டுக்குள் துணை மேயர் அரசியல் : அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மாநகராட்சி முதலாம் மண்டலம், 7வது வார்டு கவுன்சிலர், கவிதா (அ.தி.மு.க.,) பேசுகையில், ''சக்தி நகர், கணபதி நகரில் பாதாள சாக்கடை பணி மந்தமாக நடக்கிறது. கூட்டத்தில் நான் ஏற்கனவே பேசி விட்டேன்; நடவடிக்கை இல்லை. துணை மேயர் வார்டுக்கே வந்து, பார்த்து, பிரச்னை தீர்ப்பதாக கூறினார். ஆனால், அவர் கட்சியினர் (இ.கம்யூ.,) பிளக்ஸ் வைத்து போராட்டம் அறிவித்தனர்.'நிலைமை' தெரிந்தும், போராட்டத்துக்கு வந்த துணை மேயர், அவரது தலைமையில், மண்டல அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துகிறார். கேட்டால், ஆய்வுக்கு வந்ததாக கூறுகிறார்.வார்டுக்குள்ளும், வார்டு பகுதி பிரச்னைக்கும் மேயர், துணை மேயர் வரும் போது, கவுன்சிலர் என்ற முறையில் எங்களிடம் தெரிவிக்க வேண்டும். மாற்று கட்சியினராக இருந்தாலும், இவ்விஷயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது,' என்றார்.இதற்கு பதிலளித்த துணை மேயர் பாலசுப்ரமணியம், ''ஒரு பிரச்னை என்று மக்கள் அழைக்கும் போது போகாமல் இருக்க முடியுமா, முற்றுகை இடவில்லை. பேசி தீர்வு காண சென்றேன்,''என்றார்.''ஆளும்கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் எப்போது வந்தாலும், எதிர்கட்சி கவுன்சிலர்களிடம் சொல்வதில்லை. பாரபட்சம் காட்டப்படுகிறது,'' என கவிதா மீண்டும் பேச குறுக்கிட்ட மேயர், 'பாரபட்சம் என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்; அப்படியெல்லாம் இல்லை,' என்றார்.உடனே குறுக்கிட்ட காங்., கவுன்சிலர் செந்தில்குமார், ''அவர்கள் கேட்பது சரிதான்; வார்டு கவுன்சிலர் என்ற முறையில் நிச்சயம் தகவல் தெரிவித்து விட்டுதான் செல்ல வேண்டும்; அதுதான் முறையாக இருக்கும்,'' என்றார்.அதன்பின், அ.தி.மு.க., கவுன்சிலர்களும் ஒரு சேர எழுந்து, மேயர் மற்றும் துணை மேயர் பேச்சு எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பிலும் வாக்குவாதம் முற்றியது.கவுன்சிலர்கள், 'துணை மேயர் ஒவ்வொரு வார்டிலும் 'அரசியல்' செய்கிறார்; இவ்வாறு செய்வதால், எங்களால் பணி செய்ய முடியால் போகிறது; துணை மேயர் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்,'' எனக்கூறி, அ.தி.மு.க., 28வது வார்டு கவுன்சிலர் சேகர் தலைமையில், 13 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், மாமன்ற கூட்டத்தில் சில நிமிடம் சலசலப்பு ஏற்பட்டது.