உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கந்த சஷ்டி விழா துவக்கம்: விரதம் துவக்கிய பக்தர்கள்

கந்த சஷ்டி விழா துவக்கம்: விரதம் துவக்கிய பக்தர்கள்

திருப்பூர்: திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கந்தசஷ்டி விழா, நேற்று காப்பு அணியும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாளில் இருந்து, ஆறு நாட்களுக்கு கந்த சஷ்டி விழா நடக்கிறது. திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள முருகர் கோவில்களில், நேற்று கந்த சஷ்டி விழா மங்கள இசையுடன் கூடிய காப்பு அணியும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியருக்கு, அதிகாலையில் ஸ்ரீஸ்கந்த யாக பூஜைகள் துவங்கின. தனிமேடையில், ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. முருகப்பெருமானுக்கு காப்பு அணிவித்து, சிவசாச்சாரியார்களும் காப்பு அணிந்தனர்; சஷ்டி விரதம் துவங்கிய பக்தர்களுக்கும் காப்பு அணிவித்தனர். அறுநுாறுக்கும் அதிகமான பக்தர்கள், காப்பு அணிந்து விரதம் துவங்கினர். திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஷண்முகசுப்பிரமணியருக்கு மகா அபிேஷகமும், வெள்ளை நிற மலர்கள் மற்றும் வெண்ணிற பட்டு ஆடையால் அலங்கார பூஜையும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு காப்பு அணிவித்ததை தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காப்பு அணிந்து விரதம் துவக்கினர். பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னதியில், நேற்று சிறப்பு பூஜையை தொடர்ந்து, பக்தர்கள் காப்பு அணிந்து சஷ்டி விரதத்தை துவக்கினர். சஷ்டி விழாவுடன், கோவிலில் ஸ்ரீநடராஜர் - சிவகாமியம்மன் உற்சவர்கள் பிரதிஷ்டை விழா நாளை நடைபெற உள்ளது. இன்று விக்னேஷ்வர பூஜையுடன், அதற்கான யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன; நாளை, கும்பாபிேஷக விழா நடக்கிறது. சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. மதியம் வள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான், உட்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரர் சுவாமி கோவிலுக்கு எழுந்தரும் நிகழ்வு நடந்தது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்து, காப்பு அணிந்து சஷ்டி விரதத்தை துவக்கினர். அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவில், பலவஞ்சிபாளையம் காளிக்குமாரசாமி கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில், குளத்துப்பாளையம் கனககிரி வேலாயுத சுவாமி கோவில் உட்பட, அனைத்து முருகர் கோவில்களிலும், நேற்று திரளான பக்தர்கள் காப்பு அணிந்து விரதத்தை துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை