திருமூர்த்திமலை மும்மூர்த்திகளை தரிசிக்க திரண்ட பக்தர்கள்
உடுமலை: உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மும்மூர்த்திகளை தரிசனம் செய்தனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்திமலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.மேலும், மலைமேல், 960 மீட்டர் உயரத்தில், பஞ்சலிங்க சுவாமி மற்றும் பஞ்சலிங்க அருவி உள்ளது. ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை, மும்மூர்த்திகளுக்கு பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமிகளை தரிசனம் செய்தனர்.அதே போல், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ஏராளமான சுற்றுலா பயணியரும் திருமூர்த்திமலைக்கு வந்து, மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.