பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரை; பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை
உடுமலை; பழநி கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழநி முருகன் கோவிலில், வரும், பிப்., 11ம் தேதி, தைப்பூசத்திருவிழா நடக்கிறது. இதற்காக, கேரளா மாநிலம் மற்றும் கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.பொள்ளாச்சி வழியாக வரும் பக்தர்கள் உடுமலை, மடத்துக்குளம் வழியாகவும், ஆனைமலை ரோட்டில், தளி, குறிச்சிக்கோட்டை, குமரலிங்கம் வழியாகவும் பக்தர்கள் நடந்து செல்கின்றனர். வெயில் காரணமாக பெரும்பாலும் பகல் நேரங்களை தவிர்த்து, இரவு மற்றும் மாலை நேரங்களில் நுாற்றுக்கணக்கானவர்கள் செல்கின்றனர்.குறுகிய ரோடு மற்றும் விபத்துக்கள் அதிகம் நடக்கும் ரோடாக உள்ளதால், இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள, போலீசார் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.'ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்' ஒட்டுதல், கண்காணிப்பு பணி, ஓய்வு எடுக்கும் வசதிகள் செய்து தருவதோடு, பொள்ளாச்சி, பழநி ரோட்டில் செல்லும் வாகனங்களின் டிரைவர்களுக்கு உரிய அறிவிப்புகள் வழங்குதல், குறுகிய ரோடுகள் பகுதியில் பாதுகாப்பு, மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் கண்காணிப்பு பணி உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.