உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடைசி கூட்டத்தில் கவுன்சிலர்கள் போராட்டம் நிதி இல்லை என கைவிரிப்பால் ஏமாற்றம்

கடைசி கூட்டத்தில் கவுன்சிலர்கள் போராட்டம் நிதி இல்லை என கைவிரிப்பால் ஏமாற்றம்

திருப்பூர், : கையிருப்பு நிதி குறித்த விவரங்கள் தெரிவிக்க வலியுறுத்தி, திருப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு கடைசிக்கூட்டத்தில், கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 'கையிருப்பில் நிதி இல்லை' என்று தெரிவிக்கப்பட்டதால், போராட்டத்தைக் கைவிட்டனர்.ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய கடைசி கூட்டம், கோர்ட் வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் சொர்ணாம்பாள் தலைமை வகித்தார். பி.டி.ஓ., அனார்கலி முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலக செலவினங்கள், பெருமாநல்லுார், முதலிபாளையம், மங்கலத்தில் டெங்கு தடுப்பு பணிகள் உள்பட செலவு கணக்குகளுக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்ட அரங்கில் இருந்துவெளியேறிய பி.டி.ஓ.,

கவுன்சிலர் பாலசுப்பிரமணி (தி.மு.க.,), ''ஊராட்சி ஒன்றிய குழுவின் கடைசி கூட்டம் இது. கையிருப்பில் மொத்தம் எவ்வளவு நிதி உள்ளது. ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் ஒதுக்கினால், இப்போதே புதிய பணிகளை தேர்வு செய்து கொடுத்துவிடுகிறோம்'' என்றார். இதையடுத்து, மற்ற கவுன்சிலர்களும் ''நிதி ஒதுக்கீடு செய்தால், ஏற்கனவே நடைபெற்றுவரும் பணிகளை முடித்துவிடுவோம்'' என்றனர்.அதற்கு பி.டி.ஓ., 'அலுவலகத்துக்கு வாருங்கள்; கணக்கை ஆய்வு செய்து தெரிவிக்கிறேன்' என்ற படி கூட்ட அரங்கிலிருந்து வெளியேறி, தனது அறைக்கு சென்றுவிட்டார்.

'அதிர்ச்சி' பதில்அதிகாரிகள்

'நாம் எழுந்து சென்றுவிட்டால் அவ்வளவுதான்; எந்த பதிலும் அளிக்கமாட்டார்கள். நிதி இருப்பு விவரங்களை, பி.டி.ஓ., இங்கு வந்து தெரிவிக்கட்டும். அதுவரை, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்று கூறிய கவுன்சிலர்கள், இருக்கையில் அமர்ந்தபடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் வரை, கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் கூட்ட அரங்கிற்கு வந்து, 'கையிருப்பில் நிதி இல்லை' கூறியதையடுத்து, கவுன்சிலர்கள், போராட்டத்தை கைவிட்டு எழுந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை