அரசு பள்ளிகள் தயாராக இருந்தும் அமைச்சர் வராததால் ஏமாற்றம்
உடுமலை, ; மாணவர்களின் வாசிப்புத்திறனில் அரசு பள்ளிகள் தயாராக இருந்தும், அமைச்சர் வருகை இல்லாததால், ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.கடந்த ஆண்டு நவ., மாதம், அரசுப்பள்ளி ஒன்றில் மாணவர்களின் வாசிப்புத்திறனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பார்வையிட்டார். அதேபோல், மற்ற அரசுப்பள்ளிகளும், நுாறு சதவீதம் மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த அறிவுறுத்தினார்.குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து, அப்பள்ளிகளில் நுாறு சதவீதம் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்துவதற்கு உத்தரவிட்டது. மேலும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு நடக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில், ஒவ்வொரு வட்டாரத்திலும் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், பிப்., மாதம் இந்த ஆய்வு நடப்பதாக சுற்றறிக்கை விடப்பட்டது.ஆனால் எதுவும் நடக்கவில்லை. இறுதியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மட்டுமே, மாணவர்களின் வாசித்தல் திறனை ஆய்வு செய்து வருகின்றனர்.அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:அரசுப்பள்ளிகளை பார்வையிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வருவதாக முன்பு அறிவிக்கப்பட்டதால், மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளித்தும், ஆவலுடன் காத்திருந்தோம். ஆனால், தற்போது கல்வியாண்டும் நிறைவடைந்துவிட்டது. அமைச்சர் வராததால் ஏமாற்றமடைந்தோம். ஆனாலும் மாணவர்கள் வாசித்தலில் மேம்பட்டுள்ளதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.