மாவட்ட விளையாட்டு போட்டி; 10 நாள் நடத்த ஏற்பாடு தீவிரம்
திருப்பூர்; பள்ளி கல்வித்துறையின் புதிய விளையாட்டு போட்டிகள், இன்று முதல் டிச., 14ம் தேதி வரை பத்து நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.குறுமைய விளையாட்டு போட்டிகள் ஆக., இறுதியில் முடிக்கப்பட்ட நிலையில், மாநில விளையாட்டு போட்டி ஜனவரி., பிப்., மாதம் நடப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், மாவட்ட விளையாட்டு போட்டிக்கான அறிவிப்பை, மாவட்ட கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இன்று துவங்கி டிச., 14 ம் தேதி வரை பத்து நாட்கள் பல்வேறு பகுதியில் போட்டி நடக்கவுள்ளது.அதன் விவரம் வருமாறு:மாணவர் பீச்வாலிபால், டென்னிகாய்ட் போட்டி, திருப்பூர், காங்கயம் ரோடு, ஜெய்நகர் வித்யவிகாசினி பள்ளியில் இன்று துவங்குகிறது. 14, 17 மற்றும், 19 வயது பிரிவினர் பங்கேற்கின்றனர். நாளை (27ம் தேதி) மாணவியர் அனைத்து பிரிவுக்கும், பீச்வாலிபால், டென்னிகாய்ட் போட்டி இதே பள்ளியில் நடக்கிறது.மாணவர் மற்றும் மாணவியர் இருவருக்கும் கேரம் போட்டி, திருப்பூர், காலேஜ் ரோடு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. வரும், 28, 29ம் தேதி முறையே டேக்வாண்டோ, ஜூடோ போட்டி, நத்தக்காடையூர், பில்டர்ஸ் இன்ஜி., கல்லுாரி மற்றும் காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடத்தப்பட உள்ளது.முதல் நாள் மாணவருக்கும், மறுநாள் மாணவியருக்குமான போட்டி நடக்கிறது. இக்கல்லுாரியில் டிச., 2ம் தேதி சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக் போட்டி நடக்கிறது.திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளியில், வரும், 30ம் தேதி வாள் சண்டை, டிச., 3ல் மாணவியர் சிலம்பம், டிச., 4ல் மாணவர் சிலம்பம், 7ம் தேதி மாணவியர் குத்துச்சண்டை, 14ம் தேதி, மாணவர் குத்துச்சண்டை போட்டி நடக்கிறது. நீச்சல் போட்டி, ஏ.பி.எஸ்., அகாடமியில், 30ம் தேதி நடக்கிறது.இது குறித்து, மாவட்ட விளையாட்டு பிரிவு அலுவலர்களிடம் கேட்ட போது,'டிச., மாதம் அரையாண்டு தேர்வு நடத்த வேண்டுமென அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தேர்வுக்கு முன்னதாக போட்டிகளை நடத்தி முடித்து விட வேண்டும் என்பதால், நடப்பு வாரம் மாவட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது,' என்றனர்.