மேலும் செய்திகள்
'108 ஆம்புலன்சை தாக்கினால் 10 ஆண்டு சிறை'
26-Aug-2025
திருப்பூர்; திருப்பூரில் நேற்று தி.மு.க., கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, வெயில் கொடுமை தாளாமல் கூட்டம் துவங்கும் முன்பே மக்கள் கலைந்து சென்றனர். அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியால் திருப்பூர் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி திருப்பூரில் நேற்று தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க., உள்ளிட்ட 13 கூட்டணி கட்சிகளின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டம் திரட்ட மாநகராட்சி வார்டுகளில் இரண்டு வாகனங்கள், தலைக்கு 200 ரூபாய், வாட்டர் பாட்டில், மதிய உணவு ஆகியன ஏற்பாடு செய்து தி.மு.க., வினர் அழைத்து வந்தனர். காலை 9:00 மணி முதலே வந்த கூட்டம், வெயில் தாக்கம் காரணமாக ஆர்ப்பாட்டம் துவங்கும் முன்பே சிறிது சிறிதாக கலையத் துவங்கியது. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேசி முடித்தவுடன், அவர்களின் கட்சி தொண்டர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். சில முக்கிய தலைவர்கள் பேசத் துவங்கிய போது, மேடையின் முன்புறத்தில் கூட்டம் இன்றி வெறிச்சோடியது. மேடையிலிருந்த மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ், தினேஷ்குமார் ஆகியோர் ஆங்காங்கே கடைகளிலும் மர நிழலிலும் ஒதுங்கியவர்களை முன்புறம் வருமாறு அழைத்த வண்ணம் இருந்தனர். கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு, குடிநீர் பாட்டில் சப்ளை செய்யப்பட்டது. கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டோர்களில் பெரும்பாலும் மிகவும் வயதானவர்களாக இருந்தனர். இதனால் வெயில் தாக்குப் பிடிக்க முடியாமல் பலரும் ஆங்காங்கே கிடைத்த நிழலில் ஒதுங்கிக் கொண்டனர். சிலர் ரோட்டின் ஓரத்தில் சிலர் அமர்ந்து கொண்டனர். வெயில் தாளாமல் ஒரு பெண் மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுபோல் வேறு யாரேனும் மயங்கி விழுந்தால், அவர்களை மீட்கும் வகையில், தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனம் மேடை அருகே நிறுத்தப்பட்டது.
26-Aug-2025