| ADDED : ஜன 04, 2024 12:49 AM
திருப்பூர்: குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், முதல் கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்புகளை துண்டிக்க கூடாது என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவிநாசி தாலுகா, ஆலத்துார் ஊராட்சி, தொட்டிபாளையம் பகுதி மக்கள், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் நேற்று அளித்த மனு: ஆ.தொட்டிபாளையம் கிராமத்தில், 150 வீடுகளில் வசித்து வருகிறோம். முதலாம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், 20 ஆண்டுகளாக சிறப்பாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. 2வது திட்டத்தில், சங்கம்பாளையத்தில், 1.40 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.அந்த தொட்டியிலிருந்து, ஊராட்சியில் உள்ள, 19 மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு வினியோகம் செய்ய உள்ளனர். குறுகிய நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. அதனால், குடிநீர் தேக்க தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார், காலையில் ஆறு மணி நேரமும் மாலையில் ஆறு மணி நேரம் மட்டுமே இயக்க முடியும்.தொட்டிபாளையத்தில் தற்போது 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள ஒரே ஒரு மேல் நிலை தொட்டி மட்டுமே உள்ளது. இந்நிலையில், முதல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இணைப்புகளை துண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. ஏற்கனவே அருகிலுள்ள நல்லகாளிபாளையம், முருககவுண்டம் புதுரில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. எனவே, எங்கள் ஊரில் உள்ள முதல் கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்புகளை துண்டிக்க கூடாது. இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.