மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்ட கலெக்டர்
16-Mar-2025
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், அரசு கட்டட பொறியாளர்களுக்கான பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.பயிற்சியை துவக்கி வைத்து கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் கூட்ட அரங்கு, மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும் சுயமாக பயன்படுத்தும் வகையிலான கட்டமைப்புகளை கொண்டிருக்கவில்லை. இந்த அரங்கிலுள்ள மேடையிலேயே, மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து பேசுவதில் ஏராளமான சிரமங்கள் உள்ளன. இப்பயிற்சிக்குப்பின், அரசு அலுவலக கட்டுமானங்களில் தேவையான மாற்றங்கள் செய்து, அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் நிலையை உருவாக்கவேண்டும்,' என்றார். எளிமையான கட்டமைப்பு
லவ் அண்ட் அக்சப்டென்ஸ் நிர்வாக இயக்குனர் லலித்குமார் பேசியதாவது:அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து பொது பயன்பாட்டு இடங்களிலும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் சுயமாக பயன்படுத்தும் வகையிலான கட்டுமானம் இருக்கவேண்டும் என்கிற விதிமுறைகள் உள்ளன. அதிக உயரம் மற்றும் சறுக்கும் வகையிலான சாய்தளங்கள், உயரமான படிக்கட்டுகள், லிப்ட் இருந்தாலும் கூட, உயரமான படிக்கட்டுகளால் மாற்றுத்திறனாளிகள் பிறர் உதவியை எதிர்பார்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.அதேபோல், அதிக உயரத்தில் சுவிட்ச், தண்ணீர் பைப் அமைப்பதால், மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பொறியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் சுயமாக பயன்படுத்தும் வகையிலான கட்டமைப்புகளுடன் கட்டுமானங்களை கட்ட வேண்டும். வீல் சேர் பயன்படுத்துவோர், பார்வையற்ற, காது கேளாதோர் ஆகிய மூன்று வகை மாற்றுத்திறனாளிகளை கருத்தில்கொண்டு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினாலே, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், பிறர் உதவியின்றி சுயமாக குறிப்பிட்ட அலுவலகத்தை பயன்படுத்த முடியும். சரியான முறையில் சாய் தளங்கள்
துாத்துக்குடியை சேர்ந்த பொறியாளர் டேனிஷ் கனகராஜ் பேசியதாவது:உடல் சார்ந்தும், பொருளாதார ரீதியாகவும் மாற்றுத்திறனாளிகள் தினந்தோறும் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். இச்சூழலில், அரசு அலுவலகங்கள் உள்பட பொது பயன்பாட்டு இடங்களில், தாங்கள் சுயமாக பயன்படுத்தும் வகையிலான கட்டமைப்பு இல்லாதது அவர்களுக்கு மேலும் துன்பம் அளிக்கிறது. ஒரு அலுவலகம் அல்லது வணிக வளாகத்தில் நுழைவாயில் முதல், பார்க்கிங், அறைகள், கூட்ட அரங்க மேடைகள், வராண்டா, கழிப்பிடம் என பகுதிகளிலும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் சுயமாக பயன்படுத்தும் வகையிலான கட்டமைப்புகளை கொண்டிருக்க வேண்டும். பார்க்கிங் பகுதியில், ஸ்கூட்டர் நிறுத்துவதற்கு கூடுதல் இடைவெளியுடன் வசதி இருந்திருக்க வேண்டும். வீல் சேர்களில், பிறர் உதவியின்றி மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல சரியான உயரத்தில் சாய்தளங்கள் அமைக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் முன்னிலை வகித்தார். மாவட்டத்திலுள்ள அரசுத்துறை சார்ந்த பொறியாளர்கள் பங்கேற்றனர்.
16-Mar-2025