உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாறைக்குழியில் குப்பை கொட்டாதீங்க! கையெடுத்து கும்பிட்டு மக்கள் உருக்கம்

பாறைக்குழியில் குப்பை கொட்டாதீங்க! கையெடுத்து கும்பிட்டு மக்கள் உருக்கம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, முதலிபாளையத்தில், காலாவதியான பாறைக்குழியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. அங்கும், குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலிபாளையம் சுற்றுப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நுாற்றுக்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்று, கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், மனு அளித்த பொதுமக்கள், கலெக்டரை பார்த்து இருகரம் கூப்பியவாறு, ''முதலிபாளையத்தில், குப்பை கொட்டும் பாறைக்குழி சுற்றுப்பகுதிகளில் கல்வி நிறுவனங்கள், விவசாய நிலங்கள் உள்ளன. அங்கு குப்பை கொட்டுவதால், மாணவர்கள் பாதிக்கப்படு கின்றனர். நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, விவசாய நிலங்கள் பாழ்படும் அபாய நிலை உருவாகிறது. குப்பைக்கு தீ வைப்பதால் எழும் புகையால், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறோம், தயவு செய்து பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை நிறுத்துங்கள்,'' என்று உருக்கமாக பேசினர். கலெக்டர் மனீஷ்நாரணவரே, 'இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, முடிவு செய்யப்படும்' என்றார். அதற்கு பொதுமக்கள், 'பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யும்வரை, தற்காலிகமாக குப்பை கொட்டுவதை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிடில், ஆதார், வாக்காளர் அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் நடத்துவதை தவிற வேறுவழியில்லை' என்றனர். இப்பிரச்னை தொடர்பாக, உரிய தீர்வு காணப்படும் என, கலெக்டர் உறுதி அளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ