கல்விக்கடன் விண்ணப்பம் வங்கி அதிகாரிகள் யோசனை
திருப்பூர் : மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக, வங்கிகள் வாயிலாக, கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கல்விக் கடன் பெற விரும்புவோர், தேவையான ஆவணங்களுடன் 'வித்யா லட்சுமி' போர்ட்டல் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, கல்வி கட்டணத்தில், குறிப்பிட்ட அளவு சலுகை வழங்கப்படுகிறது. தவிர, தொழில்சார்ந்த படிப்புகளை படிப்போருக்கு, வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.மாணவர்களின் பெற்றோரின் 'சிபில்' சரிபார்க்கப்பட்டு, கல்விக்கடன் வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில்வோருக்கு கல்விக் கடன் வழங்கப்படும் நிலையில், சான்றிதழ் படிப்புக்கு கல்விக்கடன் வழங்கப்படுவதில்லை.வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கிகளில் 40 சதவீதம் அளவுக்கு முன்னுரிமை பிரிவில் கடன் வழங்கப்படுகிறது. இதில், தொழிலுக்கு, விவசாயத்துக்கு, வீடு கட்ட, கல்விக்கு என, இந்த முன்னுரிமை பிரிவில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், வங்கிக் கடனுக்கு என, குறிப்பிட்ட அளவு இலக்கு நிர்ணயிக்கப்படுவதில்லை. தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும், கல்விக்கடன் வழங்க வேண்டும் என்பது தான் நியதி. அதன்படியே, வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.முதலில், தேவையான ஆவணங்களுடன், மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று, அதிகாரிகளிடம், கல்விக் கடன் விண்ணப்பம் குறித்து ஆலோசிக்கலாம். ஏனென்றால், குறிப்பிட்ட வங்கியில், கல்விக்கடன் வழங்கி வாராக்கடன் அதிகமாக இருக்கலாம். அதனால், கல்விக்கடன் வழங்க இயலாத நிலை கூட ஏற்படலாம்.வித்யா லட்சுமி போர்ட்டலில் விண்ணப்பித்து, தவிர்க்க முடியாத சூழலில், விண்ணப்பம் ஏற்கப்படாமல் இருக்கும் நிலையை, இதன் வாயிலாக தவிர்த்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட வங்கிகளில் கல்விக் கடன் பெற முடியாமல் போனால், வேறு வங்கிகளை நாடவும் வழியிருக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.