உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.62 ஆயிரம் மின் கட்டணம்: ரூ.2,678 ஆக குறைப்பு

ரூ.62 ஆயிரம் மின் கட்டணம்: ரூ.2,678 ஆக குறைப்பு

திருப்பூர் : தென்னம்பாளையம் பகுதியில் வீட்டு மின் இணைப்பு தாறுமாறாக ஓடியது. இதனால் 62 ஆயிரம் ரூபாய் என மின் கட்டணம் எகிறியது. கடுமையான போராட்டங்களுக்குப் பின் தற்போது 2,678 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர், தென்னம்பாளையம் பூம்புகார் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். அவரது வீட்டு மின் இணைப்புக்கு நடப்பு மாதம், 5,437 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாகவும் 61,173 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் மின் வாரியம் தகவல் அளித்தது. அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து மின் வாரியத்தினர் கவனத்துக்கு கொண்டு சென்றார். மின் மீட்டரை கழட்டி எடுத்து பரிசோதனை செய்த மின்வாரியத்தினர் ஒரு வாரமாகியும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மின் கட்டணம் செலுத்த வேண்டிய தேதி நெருங்கும் நிலையில், இது குறித்து மின் வாரிய அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு தொடர்ந்து சென்று வலியுறுத்தப்பட்டது. இதுதவிர, 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதனையறிந்த சுப்ரமணியம் வீட்டுக்கு நேற்று காலை சென்ற மின்வாரிய ஊழியர்கள், மின் மீட்டர் கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது என்று கூறி, முந்தைய மூன்று மாத மின் கட்டணங்களின் சராசரி தொகையைக் கணக்கிட்டு, 2,678 ரூபாய் மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தி, அதற்கான திருத்தங்களையும் ஆவணங்களில் பதிவேற்றம் செய்தனர். இதனால், சுப்பிரமணியம் நிம்மதி அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !