நோய் பரப்பும் பகுதியாக நுழைவாயில்: மடத்துக்குளம் ஜி.எச்., அவலம்
உடுமலை: மடத்துக்குளம் அரசு மருத்துவமனை முன், குடிநீர் பல வாரங்களாக வீணாகச்சென்று, சேறும், சகதியுமாக மாறியுள்ளதால், அனைத்து தரப்பினரும் பாதித்து வருகின்றனர்; எத்துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மடத்துக்குளம் நால்ரோடு சந்திப்பு அருகே, அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள், மருத்துவ தேவைக்காக இங்கு வந்து செல்கின்றனர். நெருக்கடியான பகுதியில் மருத்துவமனை நுழைவாயில் அமைந்துள்ளது. இந்நிலையில், திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் அப்பகுதியில் உடைந்து, பல வாரங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. மருத்துவமனைக்கு செல்பவர்களும், பஸ்களில் இருந்து இறங்குபவர்களும் சேற்றில் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். தண்ணீர் தேங்குவதால், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இவ்வாறு, அரசு மருத்துவமனை முன் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டும், பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை என எத்துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை. பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி, அரசு மருத்துவமனை நுழைவாயில், நோய் பரப்பும் பகுதியாக மாறி விட்டதாக, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். இதே போல், தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில், பிரதான குழாய் உடைப்பால், பள்ளங்கள் ஏற்பட்டு, ரோடும் சேதமடைந்து வருகிறது. நெடுஞ்சாலை வடிகால் ஆக்கிரமிப்பை அகற்றி, குடிநீர் திட்ட பிரதான குழாயை முழுமையாக சீரமைத்தால் மட்டுமே, மடத்துக்குளம் நால்ரோட்டில் நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.