உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானாவாரியிலும் பரவலாக மக்காச்சோளம் விதைப்பு தீவிரம்! உரங்கள் இருப்பு குறித்தும் அதிகாரிகள் ஆய்வு

மானாவாரியிலும் பரவலாக மக்காச்சோளம் விதைப்பு தீவிரம்! உரங்கள் இருப்பு குறித்தும் அதிகாரிகள் ஆய்வு

உடுமலை : பருவ மழையை தொடர்ந்து, மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால், சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், 'தினமலர்' செய்தி எதிரொலியாக, சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு குறித்து, வேளாண் அதிகாரிகள் குழுவினர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், ஆய்வு செய்தனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக இருந்தது. வறட்சி, படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால், சாகுபடி பரப்பு குறைந்தது.இந்நிலையில், கோழி, மாட்டுத்தீவன உற்பத்திக்கு மட்டுமின்றி, எத்தனால் உற்பத்திக்கும் மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், மக்காச்சோளம் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்து காணப்படுகிறது.உடுமலை பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை திருப்தியாக பெய்த நிலையில், பி.ஏ.பி., அமராவதி மற்றும் இறவை பாசன நிலங்களில், அதிகளவு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை மற்றும் பாசனத்தை ஆதாரமாகக்கொண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.தற்போது, வட கிழக்கு மழையும் திருப்தியாக பெய்து வருவதால், மானாவாரி நிலங்களிலும் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனால், நடப்பாண்டு ஏறத்தாழ, 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடியாகும் வாய்ப்புள்ளது. இப்பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம் அறுவடை, டிச., துவங்கி, மார்ச் வரை நீடிக்கும் என்பதால், உற்பத்தியும் அதிகரிக்கும்.இவ்வாறு, தெரிவித்தனர்.பி.ஏ.பி., மண்டல பாசனம் மற்றும் அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு மற்றும் பருவமழை காரணமாக, பல ஆயிரம் ஏக்கரில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், சில உரங்களின் விலை வெளிச்சந்தையை விட கூடுதலாக உள்ளது. இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை, 'தினமலர்' நாளிதழில் செய்தியாக வெளியானது.இதையடுத்து, குடிமங்கலம், உடுமலை வட்டாரங்களிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உர விற்பனை குறித்து, வேளாண்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.திருப்பூர் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் ஷீலாபூசலட்சுமி, தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குனர் சக்திவேல், தரக்கட்டுப்பாட்டு வேளாண் அலுவலர் சீதா, பொங்கலுார், குண்டடம், உடுமலை, குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.நடப்பு பருவத்துக்கு தேவையான உர இருப்பு, விற்பனை முனைய கருவி வாயிலாக உர விற்பனை, ரசீது வழங்குதல், விலைப்பட்டியல் பராமரித்தல், அரசு நிர்ணயித்த விலையில் உரங்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.அரசு நிர்ணயித்த விலையை விட, அதிகமான விலைக்கு உரங்கள் விற்பனை செய்யும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை