உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எங்கெங்கு நோக்கினும் கண்ணனே! வீரராகவப்பெருமாள் கோவிலில் கோலாகலம்

எங்கெங்கு நோக்கினும் கண்ணனே! வீரராகவப்பெருமாள் கோவிலில் கோலாகலம்

திருப்பூர்; 'எங்கெங்கு நோக்கினும் கண்ணனே' நிகழ்ச்சியில் நேற்று, கிருஷ்ணராகவும், ராதையாகவும் வேடமணிந்த குழந்தைகள், கோவில் வளாகத்தில் குதுாகலமாக விளையாடியது, காண்போரை கவரும் வகையில், கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஹிந்து அறநிலையத்துறை, 'தினமலர்' நாளிதழ், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை, கவிநயா நாட்டியாலயா, எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமங்கள், 'எங்கெங்கு நோக்கினும் கண்ணனே' என்ற, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்தது. நிகழ்ச்சியில், நாட்டியாலயா மாணவி வரவேற்றார். மாலை, 5:45 மணிக்கு, கிருஷ்ணர் பஜனை பாடல் நிகழ்ச்சியில், சர்மிதா, ஏஞ்சல், லயா, அக்னயா உள்ளிட்டோர் பாடினர். பரதநாட்டிய சிறப்பு குறித்து, கவிநயா நாட்டியாலயா ஆசிரியை மேனகா பேசினார். தொடர்ந்து, ஸ்ரீ விருக் ஷா இசையாலயா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. தாமோதர் வீணை இசை நிகழ்ச்சியும், கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகளுடன், 'மாடு மேய்க்கும் கண்ணே...' என்ற பாடலுக்கான குழு நடனம் நடந்தது. பெற்றோர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, 'லக்கி நம்பர்' போட்டியும், குழந்தைகளுக்கு, நடையில் நிற்கும் போட்டியும், பந்து பரிமாற்ற போட்டிகளும் நடந்தது. திருப்பூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த குழந்தைகள், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்த குழந்தைகள், பெற்றோருடன் வந்திருந்தனர். விழா நிறைவாக, விழாவில் பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம் சார்பில், 'ஸ்கூல் பேக்' வழங்கப்பட்டது. இன்று புரட்டாசி மாதம் பிறக்க உள்ள நிலையில், நேற்று பெருமாள் கோவிலில், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்த குழுந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது, கண்கொள்ளா காட்சியாக இருந்தது. நிகழ்ச்சியில், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் செளமீஸ் நடராஜன், சிவராம், அறங்காவலர் குழு தலைவர் சங்குராஜ், அறங்காவலர் சம்பத்குமார், செயல் அலுவலர் வனராஜா உள்ளிட்டோர், சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். முன்னதாக, கோவில் நிர்வாகம் சார்பில், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள், நவரத்ன அங்கி, பாண்டியன் கொண்டை அலங்காரத்துடன் எழுந்தருளினர். உற்வசமூர்த்திகள் முன்னிலையில், உறியடிக்கும் நிகழ்ச்சியும், வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சி நிறைவாக, உற்சவ மூர்த்திகள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ