கோவில் தோற்றத்தை சீர்குலைக்க டிக்கெட் விற்கும் அறை விஸ்தரிப்பு
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், அர்ச்சனை சீட்டு விற்கும் அறை விரிவாக்க பணிகளை கைவிட வேண்டுமென, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பெருமாள் கோவிலில், ராஜகோபுரத்தை கடந்து சென்றதும், 12 பெரிய துாண்களுடன், கொடிமரம், கருடாழ்வார் மண்டபம் அமைந்துள்ளது. கோவில் நுழைவு பகுதி, அழகாக தோற்றமளிக்கும் வகையில், இந்த மண்டபம் எழிலுடன் அமைந்துள்ளது. உள்ளே சென்றதும், இடதுபுறம், அர்ச்சனை சீட்டு வழங்கும் அறை அமைக்கப்பட்டு இருந்தது.தற்போது, டிக்கெட் அறையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. கோவிலின் தோற்றத்தை சீர்குலைக்கும் வகையில், முன்மண்டபத்தில் உள்ள இரண்டு துாண்களை மறைத்து தற்காலிக அறை அமைக்கப்படுகிறது.இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், 'கோவிலில் அர்ச்சனை சீட்டு விற்பனை குறைவாக இருப்பதால், துாண்களை மறைத்து தற்காலிக அறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோவிலின் முன்புற தோற்றத்தை சீர்குலைக்கும் வகையில் துாண்கள் மறைக்கப்படுகின்றன. முன்மண்டப துாண்களை மறைக்காமல், அறைகள் அமைக்க திட்டமிட வேண்டும்,' என்றனர்.கோவில் செயல் அலுவலர் வனராஜாவிடம் கேட்டபோது, ''கைவசம் உள்ள பொருட்களை கொண்டு, சிசிடிவி' கேமரா அறை மற்றும் அர்ச்சனை சீட்டு விற்பனை அறை அமைக்கப்படுகிறது; முன்புற துாண்களை மறைக்காமல் தற்காலிக அறை அமைக்கப்படும்,'' என்றார்.