சோளத்துக்கு நிலையான விலை கிடைக்க எதிர்பார்ப்பு
உடுமலை: மானாவாரி மற்றும் இறவை பாசனத்தில், பரவலாக விதைப்பு செய்யப்பட்டுள்ள சோளத்துக்கு நிலையான விலை கிடைக்க, அரசு உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை சுற்றுப்பகுதிகளில், மானாவாரியாகவும், இறவை பாசனத்திலும், வெள்ளைச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.வெள்ளைச்சோளம், கால்நடைகளின், உலர் தீவனத்தேவைக்காகவும் சாகுபடியாகிறது. திருப்பூர் மாவட்டத்தில், ஒவ்வொரு சீசனிலும், சராசரியாக 95 ஆயிரம் ஏக்கர் வரை, சோளம் விதைப்பு செய்யப்படுகிறது. விவசாயிகள் கூறியதாவது: நிலையான விலை கிடைக்காதது மற்றும் மழைப்பொழிவு குறைவால், பெரும்பாலானவர்கள், சோளம் சாகுபடியை கைவிட்டு வருகின்றனர்.சிலர், சோளத்தட்டு, தீவனமாக பயன்படும் என்பதால், வடகிழக்கு பருவமழைக்காலத்தில், விதைப்பு செய்கின்றனர். கிராமங்களில், சோளம் அதிகளவு உணவுக்காக பயன்படுத்தப்பட்டது.தற்போது, பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், சீசனின்போது, சோளத்துக்கு நிலையான விலை கிடைக்க, அரசு நடவடிக்கை எடுத்தால், சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, கூறினர்.