வடகிழக்கு பருவமழைக்கு எதிர்பார்ப்பு
பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில், வறண்டு வரும் குளம் குட்டைகள், நீர்நிலைகள், வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. பல்லடம் வட்டாரத்தில், விவசாயம் கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., பாசன திட்டம் உள்ள போதும், அது குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே பயனளிக்கிறது. இதர விவசாயிகள், பருவமழையை நம்பியும், ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், தண்ணீரை விலைக்கு வாங்கியும் பயன்படுத்துகின்றனர். மக்கள் தொகை பெருக்கம் காரணமாக தண்ணீர் தேவை அதிகரிப்பதால், ஆழ்துளை கிணறுகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதனால், நிலத்தடி நீர்மட்டம், 1,200 அடிக்கு கீழ் சென்று விட்டது. நடப்பு ஆண்டு, தென்மேற்குப் பருவமழையும் எதிர்பார்த்த அளவு கிடைக்காத நிலையில், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள், வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து வறண்டு காணப்படுகின்றன. இது குறித்து, பல்லடம் வட்டார விவசாயிகள் சிலர் கூறியதாவது: நிலத்தடி நீர் நாளுக்கு நாள் அதள பாதாளத்துக்குச் சென்று வருகிறது. தண்ணீர் தேவைக்காக, பல லட்சம் செலவு செய்து, நான்கைந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், அவை பயனில்லாமல் போகின்றன. குளம் குட்டைகளுக்கு மழை நீரை எடுத்து வரும் நீர்வழிப் பாதைகளும் ஆக்கிரமிப்புகள் காரணமாக மாயமானதால், மழைநீர் சேகரிப்பும் கேள்விக்குறியாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், மழைநீர் நிரம்பி காணப்பட்ட குளம் குட்டைகள், இன்று, சராசரி மழை பெய்த போதும், தண்ணீர் இன்றி வறண்டே காணப்படுகின்றன. நீர் நிலைகளில் மழை நீரை சேகரிப்பதற்கான வாய்ப்பின்றி, கிடைக்கும் மழை நீர் அனைத்தும் வீணாகின்றன. நீர்வழிப் பாதைகளை துார்வாரி, மழை நீரை சேகரிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். எதிர்வரும் டிச., மாதம் வரை கிடைக்கும் மழை நீர்தான், நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும் உதவும். எனவே, வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.